அசோக் லேலண்ட் நிறுவனத்தின் இலகுரக வர்த்தக வாகனமான தோஸ்தின் வெற்றியை தொடர்ந்து படா தோஸ்த் (Bada Dost) மினி டிரக் ரூ.7.75 லட்சம் முதல் ரூ.7.99 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது.
முந்தைய தோஸ்த் மாடல் நிசான் நிறுவன கூட்டணியில் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், தற்போது வந்துள்ள புத்தம் புதிய படா தோஸ்த் மாடல் முற்றிலும் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் சொந்த ஆர்&டி மையத்தால் உருவாக்கப்பட்ட மாடலாகும். புதிய மாடலில் i3 மற்றும் i4 என இரு வேரியண்டுகளுக்கு கீழ் LS மற்றும் LX பிரிவுகளை பெற்றுள்ளது.
படா தோஸ்திற்கான முன்பதிவு ஆன்லைன் மூலம் முதற்கட்டமாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கோவா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் துவங்கப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களுக்குள் நாடு முழுவதும் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.
படா தோஸ்த் இன்ஜின்
சிறந்த எரிபொருள் சிக்கனம் மற்றும் மிக சிறப்பான டார்க் வழங்கும் வகையிலான அசோக் லேலண்ட் படா தோஸ்த் மாடலில் 80 HP பவரை 3,300 RPM-லும், 190 Nm டார்க் 1600-2400 RPM-ல் வழங்குகின்ற 1.5 லிட்டர் மூன்று சிலிண்டர் பிஎஸ்-6 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
5025mm நீளம், 1842mm அகலம் மற்றும் 2061mm உயரம் கொண்டுள்ள இந்த டிரக்கின் வீல்பேஸ் 2,590mm ஆக அமைந்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பம் போல கன்டெயினர், சாதாரன பாடி, குளிர்சாதன வசதி பெற்ற முறையான பாடி அமைப்பிலும் மற்றும் குப்பை சேகரிக்கும் முறையிலான பாடியிலும் ஆர்டர் செய்யலாம்.
அதிகபட்சமாக மணிக்கு 80 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் பெற்ற மாடலின் படா தோஸ்த் i3 வேரியண்டின் பே லோடு 1,405 கிலோ மற்றும் i4 வேரியண்டில் 1,860 கிலோ வரை பேலோடு ஏற்றும் திறனை பெற்றுள்ளது. வாகனத்தின் i3 வேரியண்ட் GVW 2.99T மற்றும் i4 வேரியண்ட் GVW 3.49T ஆகும்.
காரின் கேபினுக்கு இணையாக அசோக் லேலண்ட் படா தோஸ்த் மாடலின் இன்டிரியர் அமைந்திருப்பதுடன் 3 நபர்கள் பயணிக்கலாம் என ARAI சான்றிதழ் வழங்கியுள்ளது. கூடுதலாக டாப் வேரியண்டில் டில்ட் அட்ஜெஸ்டபிள் பவர் ஸ்டீயரிங், மியூசிக் சிஸ்டம், ஏசி, யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் போன்றவை இடம்பிடித்துள்ளது.
அசோக் லேலண்ட் Bada Dost விலை பட்டியல்
i3 LS – ரூ.7.75 லட்சம்
i3 LX – ரூ.7.95 லட்சம்
i4 LS – ரூ.7.79 லட்சம்
i4 LX – ரூ.7.99 லட்சம்
(எக்ஸ்ஷோரூம் மும்பை)