வருகின்ற 2017 கோடை காலத்தில் (மே) இந்திய சந்தையில் டெஸ்லா மின்சார கார்கள் விற்பனை வருவதனை டிவிட்டர் வாயிலாக டெஸ்லா தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் உறுதிப்படுத்தியுள்ளார்.
டெஸ்லா இந்தியா
சர்வதேச அளவில் மிக வேகமாக மின்சார கார்தயாரிப்பில் வளர்ந்து வரும் டெஸ்லா நிறுவனம் இந்தியா வருகை குறித்தான கேள்விக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ள செய்தியில் ”Hoping for summer this year ” என குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பகட்டத்தில் உள்ள இந்தியா மின்சார கார்களுக்கான துறையில் மஹிந்திரா நிறுவனம் சிறிய ரக கார்கள் மற்றும் இலகுரக வர்த்தக வாகனங்களை விற்பனை செய்து வருகின்றது. உலகயளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் டெஸ்லா மாடல் 3 கார் பல்வேறு நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது. வருகின்ற 2018 ஆம் ஆண்டு முதல் முழு உற்பத்தியை தொடங்க உள்ள டெஸ்லாவின் ஜிகா ஃபேக்ட்ரி வாயிலாக கட்டமைக்கப்பட்ட கார்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.
இந்தியாவில் டெஸ்லா ஆலையை அமைக்கும் நோக்கிலே கடந்த ஆண்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி டெஸ்லா ஆலையை பார்வையிட்டு எலான் மஸ்குடன் பேசி உள்ளார் . மேலும் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரியும் ஜிகா ஃபேக்டரியை பார்வையிட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கதாகும்.
சர்வதேச அளவில் விற்பனைக்கு செல்ல உள்ள டெஸ்லா மாடல் 3 மின்சார காரே விற்பனைக்கு முதற்கட்டமாக வரவுள்ளதால் இதே மாடலே இந்தியாவிலும் எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்காவில் மாடல் 3 விலை ரூ.23.50 லட்சமாகும். இந்தியாவில் இறக்குமதி வரி அதிகம் என்பதால் விலை ரூபாய் 50 லட்சம் வரை எட்டலாம். இந்தியாவில் நடைமுறையில் உள்ள FAME திட்டத்தின் கீழ் உள்நாட்டில் தயாரிக்கப்படும் அல்லது ஒருங்கினைக்கப்படும் எலக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் சார்ந்த கார்களுக்கு மட்டுமே அரசு மானியம் வழங்கப்பட்டு வருகின்றது.