சூப்பர் கார் தயாரிப்பில் பிரபலமாக விளங்குகின்ற இத்தாலி லம்போர்கினி நிறுவனத்தின் ஹூராகேன் ஸ்போர்ட்ஸ் கார் வெறும் மூன்றே ஆண்டுகளில் 8,000 என்ற உற்பத்தி இலக்கை கடந்துள்ளது. கல்லார்டோ காருக்கு மாற்றாக ஹூராகேன் அறிமுகம் செய்யப்பட்டது.
லம்போர்கினி ஹூராகேன்
முந்தைய மாடலான கல்லார்டோ 10 ஆண்டுகாலமாக சந்தையில் விற்பனை செய்யப்பட்டு 14,022 என்ற விற்பனை இலக்கை கடந்தது. அதற்கு மாற்றாக இந்நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட ஹூரானகேன் வெறும் மூன்றே ஆண்டுகளுக்குள் 8,000 உற்பத்தி இலக்கை கடந்த சாதனை படைத்துள்ளது.
கிரே வண்ணத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 8,000 வது ஹூராகேன் ஸ்பைடர் இங்கிலாந்து நாட்டில் விற்பனை செய்ய ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹூராகேன் தற்போது கன்வெர்டிபிள் மற்றும் கூபே பாடி வகைகளில் விற்பனை செய்யப்படுவதுடன் கூடுதலாக ஹூராகேன் பெர்ஃபாமென்டி மாடலும் விற்பனை செய்யப்படுகின்றது. இதுதவிர அடுத்த சில மாதங்களில் ஹூராகேன் பெர்ஃபாமென்டி ஸ்பைடர் மாடலும் அறிமுகம் செய்யப்படலாம்.
5.2 லிட்டர் V10 சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் மூன்று வகையான ஆற்றல் மாறுபாடுகளில் கிடைக்கின்றது. ஹூராகேன் LP 610-4 மாடல் 602 bhp பவரையும், LP 580-2 மாடல் 572 bhp பவரையும் பவர்ஃபுல்லான ஹூராகேன் பெர்ஃபாமென்டி 631 bhp ஆற்றலையும் வெளிப்படுத்துகின்றது.
லம்போர்கினி நிறுவனம் புதிதாக உரஸ் என்ற எஸ்யூவி மாடலை அடுத்த சில மாதங்களில் விற்பனை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகின்றது.