பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் IC என்ஜின் வாகனப் பதிவு மற்றும் புதுப்பிப்பு கட்டணம் பல மடங்கு உயர்த்துவதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை அதிகரிக்கும் முயற்சியில் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தயாரித்துள்ள புதிய வாகனப் பதிவு மற்றும் புதுப்பிப்பு கட்டணம் தொடர்பான வரைமுறையில் இரு சக்கர வாகனங்கள் முதல் நான்கு சக்கர வாகனங்கள் கனரக வாகனங்கள் வரை கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது. மேலும், 15 ஆண்டுகள் பழைய வாகனங்களை வருடத்திற்கு இரு முறை புதுப்பிக்கவும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.
வரைவின்படி இரு சக்கர வாகனத்துக்கான பதிவுக் கட்டணம் 50 ரூபாயில் இருந்து 1000 ரூபாயாக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மூன்று சக்கர வாகனங்களுக்கான பதிவுக் கட்டணம் 300யில் இருந்து 5000 ஆக, கார், ஜீப் உள்ளிட்ட வாகனங்களுக்கு 600 ரூபாயில் இருந்து 5000 என உயர்த்த வரையறுக்கப்பட்டுள்ளது.
4 சக்கர சரக்கு வாகனங்களுக்கு ஆயிரத்தில் இருந்து 10,000 ரூபாயாகவும், நடுத்தர, கனரக, சரக்கு, பயணிகள் வாகனங்களுக்கு 1000 ரூபாயில் இருந்து 20,000 ரூபாயாகவும் பதிவுக் கட்டணத்தை உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல், டீசல் வாகனங்களின் புதுப்பிப்பு கட்டணத்தையும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. ரூ .600 ஆக உள்ள பழைய நான்கு சக்கர வாகனங்களின் பதிவை புதுப்பித்தல் கட்டணம், ரூ .10,000 என உயர்த்துவதற்கான முடிவினை மேற்கொண்டுள்ளது.
15 ஆண்டுகளை கடந்த மரபுசார் எரிபொருளில் இயங்கும் வாகனங்களுக்கு 6 மாதத்துக்கு ஒருமுறை FC மேற்கொள்ள வேண்டும் என்ற வரைவை மத்திய அரசு முன்னெடுத்து வருகின்றது. பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்தால் இதற்கான சான்றிதழை பெற்று புதிய வாகனத்தை வாங்கும் போது பதிவுக் கட்டணம் இல்லாமல் இலவசமாக பதிவு செய்யப்படும்.
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ஜிஎஸ்டி வரி 12 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.