தனி நபர்கள் வாங்கும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் மானியத்தை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
வளைகுடா நாடுகளின் ஆதிக்கத்தால் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ₹80 ஆக விற்பனையாகி வருகிறது. இதைவிட ஒரு சில ரூபாய் மட்டுமே டீசலுக்கு குறைவாக உள்ளது. பெட்ரோல், டீசல் வாகனங்கள் வெளியிடும் புகையால், சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்து நிலவுகிறது. இதனால், அவை வெளியிடும் புகை அளவு குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக, பாரத் தரநிலை பின்பற்றப்பட்டு வருகிறது. இது தற்போது பாரத்-5 நிலையை தாண்டியுள்ளது.பெட்ரோல், டீசல் எரிபொருள் விலை ஏறிக் கொண்டே போவதால், அது நாட்டின் அந்நியச் செலாவணி விஷயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால்தான், ரூபாயின் மதிப்பும் சரிகிறது. இதற்கு சரியான தீர்வு எலெக்ட்ரிக் வாகனங்களை பெருமளவில் இயக்க வைப்பது. இதன் மூலம், சுற்றுச்சூழல் பாதிப்பையும் குறைக்க முடியும். இதற்காகத்தான் மத்திய அரசு, எலெக்ட்ரிக் வாகன தயாரிப்புக்கு ஊக்கம் அளித்து வருகிறது.
வரும் 2030ம் ஆண்டுக்குள் பெரும்பாலான வாகனங்களை எலெக்ட்ரிக் வானகங்களாக மாற்றிவிட வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அறிவுறுத்தி, அதற்கான திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கையையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. இதற்காக ‘பேம்’ திட்டம் (இந்தியாவில் அதிவிரைவாக ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களை ஏற்றுக்கொள்ளும் திட்டம்) செயல்படுத்தப்படுகிறது.