கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின், செல்டோஸ் காரின் விற்பனை தொடங்கி உள்ள நிலையில் செல்டோஸின் என்ஜின் மற்றும் இடம்பெற உள்ள முக்கிய வசதிகள் அனைத்தையும் அறிந்து கொள்ளலாம்.
ஜூலை 16 முன்பதிவு தொடங்கப்பட்ட இந்த மாடலுக்கு தற்போது வரை 32,035 முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமாக விற்பனைக்கு கிடைக்க உள்ள இந்த காரில் குடும்பங்களுக்கு ஏற்றதாக டெக் லைன் என்ற வேரியண்ட் தொடர் மற்றும் பெர்ஃபாமென்ஸ் ஸ்டைல் போன்றவற்றை வெளிப்படுத்தும் ஜிடி லைன் என்ற வேரியண்டின் தொடர் ஆகியவற்றில் E, K, K+, X மற்றும் X+ என்ற மாறுபாடுகளில் வழங்கப்பட உள்ளது.
செல்டோஸில் இடம்பெற உள்ள மூன்று என்ஜின்
இந்த காரில் பிஎஸ்6 அல்லது பாரத் ஸ்டேஜ் 6 மாசு உமிழ்வுக்கு இணையான நடைமுறைக்கு ஏற்றதாக வரவுள்ளது. இந்த எஸ்யூவி மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு மேனுவல் மற்றும் ஆட்டோ கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெற்றிருக்கும். இதுதவிர, 1.4 லிட்டர் GDI டர்போ பெட்ரோல் என்ஜின் கூடுதலாக டியூவல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸூடன் இடம் பெற்றிருக்கும்.
புதிய 1.4 லிட்டர் GDI டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக குதிரைத்திறன் 138 bhp மற்றும் 242 Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.
இந்த என்ஜின் 9.7 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டும், மேலும், 16.1 கிமீ (MT) மற்றும் 16.2 கிமீ (DCT) மைலேஜ் வழங்கப்படும். குறிப்பாக இந்த என்ஜின் ஜிடி லைன் தொடரில் மட்டும் கிடைக்க உள்ளது.
1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், அதிகபட்சமாக 113 பிஹெச்பி மற்றும் 144 என்எம் டார்க்கை உருவாக்குகிறது. இந்த என்ஜின் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஐவிடி (IVT – Intelligent continuously variable transmission) ஆட்டோ டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது, இந்த மாடல் மைலேஜ் 16.4 கிமீ (MT) மற்றும் 16.3 கிமீ (AT). மேலும், இந்த என்ஜின் 0-100 கிமீ வேகத்தினை எட்டுவதற்கு 11.8 வினாடிகளில் எடுத்துக் கொள்ளும்.
இறுதியாக, புதிய 1.5-லிட்டர் VGT டீசல் என்ஜினைப் பொறுத்தவரை, 113 பிஹெச்பி மற்றும் 250 என்எம் டார்க்கை உருவாக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6-ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் மாடல் வெறும் 11.5 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை பெற முடியும். செல்டோஸ் டீசல் கார் மைலேஜ் 17.8 கிமீ (AT) மற்றும் 20.8 கிமீ (MT) ஆகும்.
கியா செல்டோஸ் UVO Connect:
செல்டோஸ் எஸ்யூவி காரில் வழங்கப்பட்டுள்ள டெக் கனெக்ட்டிவிட்டி சார்ந்த UVO கனெக்ட் மூலமாக 37 விதமாக பல்வேறு வசதிகளை பெற்றுள்ளது.
யூவிஓ என்ற அமைப்பின் மூலம் நேவிகேஷன்,பாதுகாப்பு & செக்யூரிட்டி, வாகன மேலாண்மை, ரிமோட் கன்ட்ரோல் மற்றும் சிறப்பு வசதிகள் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் மூன்று ஆண்டு இலவச சந்தாவுடன் 37 அம்சங்களை யூவிஓ அமைப்பு வழங்குகின்றது.
நேவிகேஷன் பிரிவில் – நிகழ் நேரத்தில் கார் கண்காணிப்பு, கார் இருப்பிடம் மற்றும் இருப்பிட இடத்தை பகிர்தல், நிகழ் நேர போக்குவரத்து தகவல், கால அட்டவணையுடன் அமைக்கப்பட்ட செல்ல வேண்டிய இலக்கு வழங்கப்படுகின்றது.
பாதுகாப்பு & செக்யூரிட்டி பிரிவில் – எனது காரைக் கண்டுபிடி, விரும்பிய இலக்கு தேடல், காருக்கு இலக்கு வழியை அனுப்புதல் போன்ற அம்சங்களை வழங்குகிறது. பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பைப் பொறுத்தவரை, யு.வி.ஓ மூலம் தானியங்கி முறையில் விபத்து ஏற்படும் நேரத்தில் அறிவிப்புகளை, எஸ்ஓஎஸ் அவசர உதவி, அவசர தேவை அறிவிப்பு, சாலையோர உதவி, திருடப்பட்ட வாகன அறிவிப்பு, திருடப்பட்ட வாகன கண்காணிப்பு, திருடப்பட்ட வாகனத்தை இயக்காமல் தடுக்க மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கை (குறிப்பிட்ட எல்லையில் மட்டும் பயணிக்கும் வேலி, குறிபிட்ட நேர வேலி, வேகம், வேலட் , ஐடில்).
ரிமோட் கண்ட்ரோல் செயல்பாட்டின் வாயிலாக, இது மொபைல் ஆப் பயன்படுத்தி காரை ஸ்டார்ட் செய்ய, ஏசி, ஏர் பியூரிஃபையர், கதவு பூட்டுகள், ஹாரன் மற்றும் விளக்குகள் மற்றும் டயர் பிரஷர் மானிட்டர் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது.
இந்த அமைப்பு கூடுதலாக செயற்கை நுண்ணறிவு (AI) இயங்கும் குரல் அங்கீகார சேவையுடன் வருகிறது, இது தொலைபேசி அழைப்பு, வரைபடங்கள் மற்றும் நேவிகேஷன், ஏசி கட்டுப்பாடு மற்றும் குரல் கட்டளையைப் பயன்படுத்துதல் போன்ற பல அம்சங்களைக் கட்டுப்படுத்த பயன்படுகிறது.