பிஎஸ் 6 அல்லது Bharat Stage 6 என அழைக்கப்படுகின்ற புதிய மாசு உமிழ்வுக்கு இணையான அம்சம் நடைமுறையில் பிஎஸ் 4 உமிழ்வை விட மிக சிறப்பான முறையில் காற்று மாசுபாட்டினை குறைக்க உதவுகின்றது. ஐசி என்ஜின் எனப்படுகின்ற பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் விற்பனையை குறைத்து விட்டு மாற்றாக மின்சாரத்தில் இயங்கும் பேட்டரி வாகனங்ளுக்கு சர்வதேச அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றது.
பாரத் ஸ்டேஜ் ஒரு மீள் பார்வை
கடந்த 2000 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைமுறைக்கு வந்த முதல் மாசு உமிழ்வு விதிகள் யூரோ 1க்கு இணையாக இந்தியா 2000 என அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பிறகு பிஎஸ் 2 அல்லது பாரத் ஸ்டேஜ் 2 என பெயரிடப்பட்டு 2001 ஆம் ஆண்டு டெல்லி, சென்னை உட்பட முன்னணி நகரங்களில் வெளியிடப்பட்டு, 2005 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது.
பிஎஸ் 3 நடைமுறைக்கு முதலில் 2005 அமலுக்கு முன்னணி மெட்ரோ நகரங்களிலும், நாடு முழுவதும் 2010 ஆம் ஆண்டு முழுமையான பயன்பாட்டுக்கு வந்தது. இதனை தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு பிஎஸ் 4 முன்னணி மெட்ரோ நகரங்களிலும், தற்பொழுது நாடு முழுவதும் கிடைக்கின்றது.
இந்நிலையில் பிஎஸ் 5 தவிர்க்கப்பட்டு, நேரடியாக யூரோ 6 தரத்துக்கு இணையான பிஎஸ் 6 ஏப்ரல் 2020 முதல் நடைமுறைக்கு வரவுள்ளதால், அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் மிக தீவரமாக புதிய மாசு விதிகளுக்கு ஏற்ப தங்களை மேம்படுத்தி வருகின்றன.
குறைந்த பட்ச காலகட்டத்தில் பிஎஸ் 6 உமிழ்வுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டிய நேரத்தில் சரிந்து வரும் ஆட்டோமொபைல் விற்பனையை ஈடுகட்ட வேண்டிய சூழ்நிலை மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
காற்று மாசுபடுவது எவ்வாறு ?
ஐசி என்ஜின்களில் எரிக்கப்படுகின்ற பெட்ரோல், டீசல் மூலம் வெளியாகின்ற புகையின் வாயிலாக கார்பன் டை ஆக்சைடு (CO2), கார்பன் மோனாக்சைடு (CO), ஹைட்ரோகார்பன் (HC) மற்றும் நைட்ரஜன் ஆக்சைடு (NOx) ஆகியவற்றுடன் பார்ட்டிகுலேட் மேட்டர் (பி.எம்) அல்லது கார்பன் சூட் போன்றவை ஆகும்.
பிஎஸ்4 Vs பிஎஸ்6 வித்தியாசம் என்ன ?
இரண்டு மாசு உமிழ்வுகளில் பிஎஸ் 6 மூலம் பெருமளவு காற்றினை மாசுபடுத்துகின்ற நச்சு வாயு குறைக்கின்றது. குறிப்பாக, பிஎஸ் 6 விதிமுறைகளுக்கு இணங்க பெட்ரோல் கார்கள் NOx (நைட்ரஜன் ஆக்சைடுகள்) உமிழ்வை 60mg / km மேல் வெளியிடக்கூடாது. பிஎஸ் 4 விஷயத்தில் தொப்பி 80 mg / km ஆக இருக்கின்றது. டைரக்ட் இன்ஜெக்ஷன் பயன்படுத்தும் பெட்ரோல் என்ஜின்களின் விஷயத்தில் துகள் பொருள் (பி.எம்) வரம்பு 4.5 mg / Km ஆகும்.
பெட்ரோல் என்ஜின் (அனைத்தும் mg/km)
நச்சு வாயு | பிஎஸ் 4 | பிஎஸ் 6 | வித்தியாசம் |
CO (mg/km) | 1000 | 1000 | – |
HC (mg/km) | 100 | 100 | – |
NOx (mg/km) | 80 | 60 | 25 % |
PM (mg/km) | 0 | 4.5 | – |
டீசல் வாகனங்களுக்கான உமிழ்வு விதிமுறைகள் கடுமையானவை. NOx உமிழ்வு 250mg / km இலிருந்து 80mg / km ஆகவும், HC + NOx உமிழ்வு 300mg / km இலிருந்து 170mg / km ஆகவும், PM உமிழ்வு 25mg / km இலிருந்து 4.5mg / km ஆகவும் குறைக்கப்பட வேண்டும்.
டீசல் என்ஜின் (அனைத்தும் mg/km)
நச்சு வாயு | BS4 | BS6 | வித்தியாசம் |
CO (mg/km) | 500 | 500 | – |
HC+NOx (mg/km) | 300 | 170 | 43 % |
NOx (mg/km) | 250 | 80 | 68 % |
PM (mg/km) | 25 | 4.5 | 82% |
பிஎஸ் 6 வாகனமாக மாற்றுவது எப்படி ?
நேரடியாக தெளிக்கும் முறையான பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் வளிமண்டலத்தில் PM உமிழ்வைக் குறைக்க பார்ட்டிக்குலேட் ஃபில்டரை நம்பியுள்ளன. அதிக அளவிலான NOx – குறிப்பாக டீசல் என்ஜின்களில் வெளியாகிறது. lean NOx Trap (LNT) அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட வினையூக்க குறைப்பு (SCR- Selective Catalytic Reduction) முறையைப் பயன்படுத்துவதன் மூலம் கையாளப்படுகிறது.
NOx வாயுவை குறைக்க LNT பார்ட்டிகுலேட் ஃபில்டர் பயன்படுத்தப்படுகின்றது. அதுவே, நீரினை கொண்ட யூரியா (AdBlue) எனப்படுவதனை எஸ்சிஆர் (Selective Catalytic Reduction) மூலம் பயன்படுத்தினால் நீர் மற்றும் இனெர்ட் கேஸாக நைட்ரஜனை பிரிக்க உதவுகின்றது. எல்என்டி முறையை விட சிறப்பானதாக எஸ்சிஆர் விளங்குகின்றது.
பிஎஸ்4 மாடலை விட பிஎஸ் 6 மைலேஜ், பெர்ஃபாமென்ஸ் குறையுமா ?
மிக குறைவான அளவில் பெர்ஃபாமென்ஸ் குறைய தொடங்கும், ஆனால் இது மிகப்பெரிய அளவில் இருக்காது. குறிப்பாக தற்பொழுது வந்துள்ள பிஎஸ் 6 கார்கள் மற்றும் வரவிருக்கும் பைக்குகளின் பவர் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணம் மாசு உமிழ்வை கட்டுப்படுத்த பின்பற்றும் நடைமுறைகளான தூய்மைபடுத்த வழங்கப்படும் முறையில் எரிபொருளை எரிக்கும் நிகழ்விலும், வெளியேற்றும் போது தூய்மைப்படுத்த பயன்படுத்தும் ஃபில்டர்களால் இந்த இழப்பு ஏற்படும்.
அதேபோல, மைலேஜ் சார்ந்த அம்சங்களில் குறைய வாய்ப்புள்ளது. குறிப்பாக சமீபத்தில் விற்பனைக்கு வந்த டிசையர் பெட்ரோல் பிஎஸ் 4 மாடலை விட பிஎஸ் 6 மாடல் மைலேஜ் லிட்டருக்கு 0.79 கிமீ குறைந்துள்ளதாக ARAI சான்றிதழ் அளித்துள்ளது.
பிஎஸ் 6 கார் மற்றும் பைக்குகள் விலை உயருமா..?
பொதுவாக பெட்ரோல் கார்களில் பிஎஸ்6 நடைமுறைக்கு மாற்றுவது மிக சுலபமாக அமைந்து விடுகின்றது. இதன் காரணமாக பெரும்பாலும் பிஎஸ்4 மாடலை விட ரூ.10,000-ரூ.25,000 வரை பிஎஸ்6 பெட்ரோல் மாடல் விலை உயருகின்றது.
ஆனால், டீசல் கார்களின் விலை மிக கடுமையாக உயரக்கூடும். குறிப்பாக டீசல் கார்கள் பிஎஸ் 6 என்ஜினில் வரும்போது ரூ.80,000 முதல் அதிகபட்சமாக ரூ.1,00,000 வரை உயர்த்தப்படலாம்.
அடுத்து, பைக்குகளில் பொதுவாக குறைந்த சிசி கொண்ட மாடல்களில் இடம்பெற்றுள்ள சாதாரண கார்புரேட்டர்களை தவிர்த்து விட்டு எலெக்ட்ரானிக் கார்புரேட்டர் அல்லது ஃப்யூவல் இன்ஜெக்ஷன் பயன்படுத்தினால் மாசு அளவை குறைக்க இயலும் என்பதனால் விலை 10-15 % வரை உயரக்கூடும்.
பிஎஸ்6 எரிபொருள் விலை உயருமா ?
இந்தியாவை பொறுத்தவரை, பிஎஸ் 6 பெட்ரோல் மற்றும் டீசல் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் கிடைக்க துவங்கியுள்ளது. நாடு முழுவதும் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் விரிவுப்படுத்தப்பட உள்ளது. அடுத்தப்படியாக, விலை கணிசமாக உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அடுத்ததாக பெட்ரோல் மற்றும் டீசல்களில் சேர்க்கப்படுகின்ற சல்பர் அளவு 10gm/kg என குறைக்கப்படுகின்றது. இதன் காரணமாக எரிபொருளில் வெளியேறுகின்ற நச்சு காற்று குறையும்.
பிஎஸ் 6 என்ஜினில் பிஎஸ் 4 எரிபொருளை பயன்படுத்தலாமா..?
நாடு முழுவதும் பிஎஸ் 6 எரிபொருள் கிடைக்கப் பெறவில்லை, ஆனால் ஒருவேளை நீங்கள் பிஎஸ் 6 என்ஜினை பயன்படுத்த தொடங்கியிருந்தால் என்ஜின் பாதிப்படையுமா என்றால் பாதிப்படையாது என குறிப்பிடப்படுகின்றது. ஆனால் அதிக தொலைவு பயணிப்பவர்கள் பிஎஸ் 4 எரிபொருளை கொண்டு பிஎஸ் 6 என்ஜினை பயன்படுத்த வேண்டாம்.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் செல்டோஸ் பிஎஸ் 6 முறையில் பிஎஸ்4 எரிபொருளை சோதனைக்காக 1 லட்சம் கிமீ-க்கு அதிகமாக பயன்படுத்தியுள்ளது. ஆனால் பாதிப்புகள் இல்லை என்றே குறிப்பிட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் பரவலாக பிஎஸ் 6 பெட்ரோல் மற்றும் டீசல் கிடைக்க தொடங்கிவிடும்.
அடுத்து என்ன ?
ARAI அமைப்பு பிஎஸ் 6 நடைமுறைக்கு பிறகு வாகனங்களை நிகழ்நேர சாலையில் சோதனை செய்து சான்றிதழை வழங்க Real Driving Emissions (RDE) முறையை பின்பற்ற உள்ளது. விஞ்ஞான ரீதியாக கண்காணிக்கப்படும் ஆய்வகத்தை விட, வெளியேற்ற வாயுக்களில் உள்ள மாசுபடுத்திகளின் அளவு நிகழ் உலகில் வெளிப்படையாக அதிகமாக இருப்பதால், கார் உற்பத்தியாளர்கள் தங்கள் உமிழ்வுகளுக்கான தரத்தை இன்னும் கடுமையானதாக்க வேண்டி இருக்கும் வகையில் உருவாக்கப்படலாம்.
2023 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரவுள்ள RDE முறையில் பிளக் இன் ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு நிகழ் உலகில் வெளிப்படையாக சோதனை செய்ய உள்ளது.