ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் யமஹா FZ25 மற்றும் யமஹா ஃபேஸர் 25 பைக்குகள் ரூ.1.33 லட்சம் மற்றும் ரூ.1.43 லட்சம் என முறையே விற்பனைக்கு வந்துள்ளது. 250சிசி என்ஜின் பெற்ற மாடல்களாகும்.
மிக நேர்த்தியான ஸ்டைலை பெற்ற யமஹா எஃப்இசட்25 நேக்டூ ஸ்போர்ட்டிவ் ஸ்டீரிட் பைக் மாடலாகவும், முழுமையாக அலங்கரிக்கப்பட்ட அதாவது ஃபுல் ஃபேரிங் செய்யப்பட்ட ஃபேஸர் 25 என இரண்டிலும் டுயல் சேனல் ஏபிஎஸ் இணைக்கப்பட்டுள்ளது.
யமஹா FZ25
இரு பைக் மாடல்களிலும் யமஹாவின் புளூ கோர் என்ஜின் நுட்பத்துடன் சிறப்பான மைலேஜ் மற்றும் செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய ஏர் கூல்டு 4 ஸ்ட்ரோக் 249சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 20.9 ஹெச்பி பவரையும் 20 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
ஒரு லிட்டருக்கு 43 கிமீ மைலேஜ் வெளிப்படுத்தும் மாடலாக விளங்கும் FZ25 பைக்கில் முன்பக்க டயரில் 282மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க டயரில் 220 மிமீ டிஸ்க் பிரேக்கினை பெற்றுள்ளது. தற்போது கூடுதலாக டுயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது. எஃப்இசட் 25 மற்றும் ஃபேஸர் 25 பைக்கில் 14 லிட்டர் கொள்ளளவுகொண்ட எரிபொருள் கலன் மற்றும் 160 மீமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றதாக உள்ளது.
வரும் ஏப்ரல் 1, 2019 முதல் இந்திய மோட்டார் வாகன சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற அனைத்து விதமான இரு சக்கர வாகனங்களில் அடிப்படை பாதுகாப்பு வசதியை இணைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. 125சிசி அல்லது மேற்பட்ட சிசி மாடல்களில் மற்றும் 125சிசி திறனுக்கு கீழுள்ள மாடல்களில் சிபிஎஸ் பிரேக் இணைக்கப்பட உள்ளது.
இரு மாடல்களும் ஏபிஎஸ் பிரேக் இணைப்பை தவிர வேறு எவ்விதமான மாற்றங்களும் பெறாமல் கிடைக்கின்றது. முந்தைய ஏபிஎஸ் அல்லாத மாடலை விட ரூ.13,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்ஷோரும் விலை விபரம் பின் வருமாறு ;-
- யமஹா FZ25 ஏபிஎஸ் பைக் விலை ரூ. 1.33 லட்சம்
- யமஹா ஃபேஸர் 250 ஏபிஎஸ் பைக் விலை ரூ. 1.43 லட்சம்