இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள முதல் செயற்கை அறிவுத்திறனை பெற்ற முதல் எலெக்ட்ரிக் பைக் மாடலை ரிவோல்ட் இன்டெலிகார்ப் (Revolt Intellicorp) நிறுவனம் , ஜூன் மாதம் விற்பனைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளது.
முன்பாக இந்திய சந்தையில் பிரபலமாக விளங்கிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின் நிறுவனர் ராகுல் ஷர்மா தொடங்கியுள்ள மின்சாரத்தில் இயங்கும் பைக் நிறுவனத்தின் முதல் மாடல் 150 கிமீ தொலைவினை ஒரே சிங்கிள் சார்ஜினில் பயணிக்க இயலும் என தெரிவிக்கப்படுகின்றது.
ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்
குர்கானில் உள்ள மானசேர் பகுதியில் அமைந்துள்ள 1 லட்சம் சதுர அடியில் இருக்கும் ரிவோல்ட் நிறுவனத்தின் தொழிற்சாலையில் முதற்கட்டமாக ஆண்டுக்கு 1,20,000 எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க உள்ளதாக ராகுல் ஷர்மா குறிப்பிடப்பட்டுள்ளார்.
இந்த பைக்கினை நிர்வகிக்கும் நோக்கில் மிக சிறப்பான பல்வேறு டெக் வசதிகள் வழங்கப்பட்டிருக்கும். குறிப்பாக செயற்கை அறிவுத்திறன் சார்ந்த செயற்பாட்டை கொண்டிருக்கும் வகையிலான கிளஸ்ட்டரை பெற்று கூடுதலாக 4ஜி வோல்டிஇ ஆதரவை பெற்ற சிம் கார்டினை இந்த பைக் மாடல் கொண்டிருக்கும்.
பவர்ட்ரெயின், பேட்டரி, வாகனத்தின் கட்டமைப்பு தொடர்பான விபரங்கள் வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த பைக்கில் அதிகபட்சமாக 150 கிலோமீட்டர் தொலைவை ஒரே முறை சார்ஜில் பயணிக்க இயலும் வகையிலும், அதிகபட்சமாக 85 கிலோமீட்டர் வேகத்தை வெளிப்படுத்தும் திறனை ரிவோல்ட் மோட்டார்சைக்கிள் பெற்றிருக்கும்.
முதற்கட்டமாக ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சந்தையில் விற்பனைக்கு கிடைக்க உள்ள இந்த பைக் மாடல் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் அறிமுகம் செய்யப்படும். பின்பு படிப்படியாக நாடு முழுவவதும் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.