ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள செக் குடியரசின் ஜாவா மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளர், புதிதாக 2018 ஜாவா 350 ஸ்பெஷல் பைக் மாடலை ரேசிங் அனுபவத்தினை கொண்டு வடிவமைத்துள்ளது.
2018 ஜாவா 350 ஸ்பெஷல்
1960 ஆம் ஆண்டு தொடங்கிய ஜாவா ரேசிங் வரலாற்றின் உந்துதலில் வடிவமைக்கப்பட்டுள்ள ஜாவா 350 ஸ்பெஷல் மாடலில் பாரம்பரிய மிக்க தோற்ற பொலிவுடன் ரேசிங் அம்சங்களினை பெற்றதாக அமைந்துள்ளது.
பாரம்பரிய ஃபேரிங் கவுல் பேனல், ரெட்ரோ நிறத்திலான நிறத்தை கொண்டு வட்ட வடிவ முகப்பு விளக்குடன் , அதிகப்படியான க்ரோம் பாகங்களை கொண்டு , ட்வீன் புகைப்போக்கி, படுக்கை வகையிலான இருக்கை அமைப்பு மற்றும் கஃபே ரேஸர் தோற்ற அமைப்பினை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
171 கிலோ எடை கொண்டுள்ள ஜாவா 350 ஸ்பெஷல் பைக்கில் ஜாவா 350 OHC மாடலில் இடம்பெற்றுள்ள 397 சிசி பேரலல் ட்வீன் ஏர்-கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு 27.7 ஹெச்பி ஆற்றை வெளிப்படுத்தி 30.6 என்எம் டார்கினை வழங்குகின்றது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ட்வீன் ஷாக் அப்சார்பரை பெற்றதாக வந்துள்ளது.
முன் மற்றும் பின் சக்கரங்களில் டிஸ்க் பிரேக் கொண்டதாக அமைந்துள்ள ஜாவா 350 ஸ்பெஷல் பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ஆப்ஷனலாக வழங்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் ஜூன் அல்லது ஜூலை மாதம் 350 ஸ்பெஷல் விற்பனைக்கு வரக்கூடும்.
இந்தியாவின் மஹிந்திரா குழுமத்தின், கிளாசிக் லெஜென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (Classic Legends Private Limited) 60 சதவீத பங்குளை ஜாவா நிறுவனத்தில் பெற்றுள்ள நிலையில், இந்தியா உட்பட ஆசியாவில் உள்ள பல்வேறு நாடுகளில் ஜாவா மோட்டோ பிராண்டு மாடல்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
2018 Jawa 350 Special – Image Gallery