ஏப்ரல் 1ந் தேதி முதல் பி.எஸ் 3 மாசு கட்டுப்பாடு என்ஜின்களை பொருத்தப்பட்ட வாகனங்கள் விற்பனை மற்றும் பதிவு செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஒருநாள் மட்டுமே விற்பனை செய்ய முடியும் என்ற நிலையில் அதிரடி சலுகைகளை தயாரிப்பாளர்கள் வழங்கி உள்ளனர்.
பி.எஸ் 3
- பாரத் ஸ்டேஜ் 4 இந்தியாவில் 2010 ஆம் ஆண்டு முதல் முன்னணி நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டது.
- ஏப்ரல் 1ந் தேதி 2017 முதல் பிஎஸ் 4 அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயமாகின்றது.
- பி.எஸ் 3 வாகனங்கள் விற்பனை செய்ய மார்ச் 31ந் தேதி வரை மட்டுமே விற்பனை செய்யப்படும்.
ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சம்மேளனம் (சியாம்) உச்சநீதிமன்றத்தில் அளித்திருந்த அறிக்கையின்படி 6.71 லட்சம் இருசக்கர வாகனங்கள், 16,000 கார்கள், 40,000 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 96,000 வர்த்தக வாகனங்கள் என சுமார் 8.24 லட்சம் வாகனங்கள் பிஎஸ் 3 மாசு கட்டுப்பாடு என்ஜின் பொருத்தப்பட்டுள்ள நிலையில் விற்பனை செய்யப்படாமல் உள்ளது.
உச்சநீதி மன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பின் முக்கிய அம்சமாக வணிக ரீதியான நலன்களை கருத்தில் கொள்ளாமல் சுகாதாரத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
விற்பனை செய்யப்படாமல் உள்ள இருசக்கர வாகனங்களில் 3.28 லட்சம் ஹீரோ பைக்குகளாக உள்ள நிலையில் மிகப்பெரிய இழப்பீட்டை ஹீரோ மோட்டோகார்ப் சந்திக்கலாம். மொத்தமாக ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு சுமார் அதிகபட்சமாக 12,000 கோடி வரை இழப்பீட்டை சந்திக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றது.
அதிரடி சலுகைகள்
இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கையிருப்பில் உள்ள அனைத்து பி.எஸ் 3 எஞ்சின் பொருத்தப்பட்ட வாகனங்களை நாளை வரை மட்டுமே அதாவது மார்ச் 31ந் தேதி வரை மட்டுமே விற்பனை மற்றும் பதிவு செய்ய முடியும் என்பதனால் ரூ.5000 முதல் ரூ.25,000 வரை விலை சலுகை அல்லது கூடுதல் வசதிகளை வழங்குகின்றன.
எனவே இந்த சலுகையை புதிய வாகனம் வாங்க விரும்புபவர்கள் பயன்படுத்திக் கொள்ள நல்ல வாய்ப்பாகும்.
விற்பனை செய்யப்படாமல் உள்ள வாகனங்கள் என்னவாகும்..?
ஏப்ரல் 1ந் தேதிக்கு பிறகு பி.எஸ் 3 வாகனங்கள் விற்பனை செய்யப்படாத வாகனங்கள் பிஎஸ் 3 நடைமுறையில் உள்ள வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகள் உள்ளது.