டாடா மோட்டர்ஸ் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற பஞ்ச் சிறிய ரக எஸ்யூவி மூலம் முதன்முறையாக இந்திய ஆட்டோமொபைல் வரலாற்றில் டாடா முதலிடத்தை 2024 ஆம் ஆண்டு விற்பனையில் எட்டி சாதனை படைத்துள்ளது.
கடந்த ஜனவரி 2024 முதல் டிசம்பர் 2024 வரை விற்பனை செய்யப்பட்ட கார்களில் டாடா பஞ்ச் விற்பனை எண்ணிக்கை 2,02,030 ஆக பதிவு செய்துள்ளது. நாட்டின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசூகியின் வேகன் ஆர் இரண்டமிடத்தில் 1,90,855 ஆக எண்ணிக்கையுடன், 190,091 ஆக பதிவு செய்துள்ள எர்டிகா மூன்றாமிடத்திலும், காம்பேக்ட் சந்தையில் தொடர்ந்து மாருதி பிரெஸ்ஸா 1,88,160 ஆக பதிவு செய்துள்ள நிலையில் ஐந்தாம் இடத்தில் 1,86,919 எண்ணிக்கையுடன் மிகவும் பிரபலமான எஸ்யூவி க்ரெட்டா உள்ளது.
குறிப்பாக டாடாவின் விற்பனை கடந்த சில ஆண்டுகளாகவே கனிசமாக உயர்ந்து வந்த நிலையில் இந்நிறுவனத்தின் உறுதியான கட்டுமானம் பல்வேறு நவீன வசதிகள் மற்றும் எலெக்ட்ரிக் கார்கள் என தொடர்ந்து மேம்பாடுகளை சந்தித்து வருகின்றது. கடந்த 2021 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட டாடா பஞ்ச் தொடர்ந்து சிறப்பான வரவேற்பினை பெற்று வருகின்றது. குறிப்பாக சிறிய ரக மாருதி கார்கள், செடான் உள்ளிட்டவற்றை எதிர்கொள்ளுகின்றது.
1957-1985 வரை ஹிந்துஸ்தான் மோட்டார்சின் அம்பாசிடர் அதிகம் விற்பனை ஆன கார் என்ற பெருமையை பெற்றிருந்தது. இதற்கு அடுத்தப்படியாக பிரீமியர் பத்மினி இருந்தது. அதன்பிறகு, 1985 முதல் 2004 வரை மாருதியின் 800, அதன்பிறகு 2005-2017 வரை மாருதி ஆல்டோ, 2017-2023 மாருதியின் டிசையர், ஸ்விஃப்ட், வேகன் ஆர் போன்றவை இடம்பெற்றிருந்த நிலையில், 2024ல் டாடா பஞ்ச் பெற்றுள்ளது.
பஞ்ச் பெட்ரோல் மட்டுமல்லாமல் எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் விற்பனை செய்யப்படுகின்றது.