வரும் காலத்தில் எலெக்ட்ரிக் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் பெறும் என்பதனால் ஓலா எலெக்ட்ரிக் மொபிலிட்டி சேவையை ஓலா நிறுவனம் வழங்கி வருகின்றது. இந்த பிரிவில் இந்தியாவின் மிகப்பெரிய மோட்டார் வாகன தயாரிப்பாளரான டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா முதலீடு செய்ய உள்ளார்.
முன்பாக இந்த பிரிவில் டைகர் குலோபல் மற்றும் மேட்ரிக்ஸ் இந்தியா நிறுவனமும் 400 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர். மேலும் ரத்தன் டாடா ஓலாவின் தலைமை நிறுவனமாக செயல்படும் ஏஎன்ஐ டெக்னாலஜிஸ் -யிலும் ரத்தன் டாடா முதலீட்டைச் செய்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடதக்கதாகும்.
ஓலா எலெக்ட்ரிக் மொபிலிட்டி
கடந்த 2018 ஆம் ஆண்டு நாக்பூரில் முதற்கட்டமாக சோதனை ஓட்ட முறையில் பிரத்தியேக ஓலா எலெக்ட்ரிக் மொபிலிட்டியை இந்நிறுவனம் தொடங்கி தற்போது வெற்றிகரமாக இயக்கி வருகின்றது. படிப்படியாக நாட்டின் பல்வேறு முன்னணி நகரங்களில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.
மிஷன் எலெக்ட்ரிக் என்ற நோக்கத்துடன் 2021-ல் இந்திய சாலைகளில் 10 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை இயக்க ஓலா நிறுவனம் இலக்கு வைத்துள்ளது. ரத்தன் டாடா அவர்கள் முதலீடு செய்ய உள்ள தொகை குறித்த எந்த தகவல்ம் இடம்பெறவில்லை.
ஓலாவில் முதலீடு செய்வது குறித்து பேசிய ரத்தன் டாடா அவர்கள், ஓலாவின் தலைமை செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் முயற்சியை பாராட்டுகிறேன். எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியில் ஓலா எலெக்ட்ரிக் மொபிலிட்டியின் பங்கு மிக முக்கியமானதாக எதிர்காலத்தில் விளங்கும் என குறிப்பிட்டார்.