மிக நீண்ட காலத்திற்குப் பிறகு ஆட்டோமொபைல் சந்தையில் வரவுள்ள ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் ஐபிஓ எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கின்ற நிலையில் பங்குகளின் விலை ரூபாய் 72 முதல் ரூபாய் 76 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆங்கர் முதலீடு ஆகஸ்ட் 1, 2024 நடைபெற உள்ள நிலையில் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி வரை பங்கு விற்பனை நடைபெறுவதுடன் ஆகஸ்ட் 9 ஆம் தேதி NSE, BSE என இரண்டிலும் பட்டியலிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Ola Electric IPO
ஓலா நிறுவனம் புதிய பங்கு வெளியீடு மூலம் ₹ 5,500 கோடி, விற்பனைக்கான சலுகை (Offer for Sale) மூலம் மேலும் ₹ 646 கோடியை திரட்ட இலக்கு வைத்துள்ளது. இதன் மூலம் நிறுவன மதிப்பு ₹ 33,522 கோடி ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஐபிஓவில் புதிய பங்குகள் வெளியீடு மற்றும் ப்ரோமோட்டர் பவிஷ் அகர்வால், சாஃப்ட் பேங்க், டெமாசெக் மற்றும் மேட்ரிக்ஸ் பார்ட்னர்ஸ் இந்தியா உள்ளிட்ட தற்போதைய பங்குதாரர்களின் 8.4 கோடி பங்குகள் வரை விற்பனைக்கான சலுகை (OFS) உள்ளது.
நிறுவன முதலீட்டாளர்கள் (75%), நிறுவன சாராத முதலீட்டாளர்கள் (15%) மற்றும் சில்லறை முதலீட்டாளர்கள் (10%) ஆகியவற்றுக்கான ஒதுக்கீடுகளாக ஐபிஓ வெளியீடு பிரிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 195 பங்குகளில் முதலீடு செய்யலாம்.
ஓலா எலக்ட்ரிக் பங்குகளின் விலை ரூபாய் 72 முதல் ரூபாய் 76 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் சில்லறை முதலீட்டளர்களுக்கு ஒரு லாட்டு 195 பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படும். எனவே, இதன் மடங்குகளில் முதலீட்டளர்களின் தேவைக்கு ஏற்ப பங்குகளில் முதலீடு செய்யலாம். கூடுதல் சலுகையாக ஓலா நிறுவன ஊழியர்கள் ஒரு பங்கிற்கு ₹ 7 தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.
பங்கு வெளியீட்டு மூலம் திரட்டப்பட உள்ள நிதி ஆனது பேட்டரி செல் உற்பத்தி திறனை விரிவுபடுத்துதல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் கடனை திருப்பிச் செலுத்துதல் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும்.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ள நிலையில் உள்நாட்டு மற்றும் வெளிநாடு முதலீட்டாளர்களிமிருந்து முதலீடு அதிகமாக பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
குறிப்பாக இந்நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் நாட்டின் முதன்மையான ஸ்கூட்டர் தயாரிப்பாளராகவும், தற்பொழுது டிவிஎஸ், பஜாஜ் சேத்தக், ஏதெர் உள்ளிட்ட நிறுவனங்களுடன் சந்தையை பகிர்ந்து கொள்கின்றது.
எதிர்காலத்தில் வரவுள்ள ஹீரோ வீடா சந்தையை விரிவுப்படுத்த உள்ள நிலையிலும் ஹோண்டா, யமஹா, சுசூகி நிறுவனங்கள் என பல்வேறு தயாரிப்பாளர்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பைக் சந்தையில் நுழையும் பொழுது மிகப்பெரிய சவாலினை இந்நிறுவனம் எதிர்கொள்ள தயாராக வேண்டி இருக்கின்றது. மேலும் ஓலா நிறுவனம் சொந்தமாகவே பேட்டரிக்கான செல் தயாரிப்பில் ஈடுபட திட்டமிட்டு இருக்கின்றது.
தற்பொழுது இந்த நிறுவனத்திற்கு மிகப்பெரிய சிக்கலாக இருப்பது சர்வீஸ் தொடர்பான குறைபாடுகள் தான் அதிகமாக இருக்கின்றது. சர்வீஸ் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொழுதே இதனுடைய வாடிக்கையாளர்கள் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தால் சாதிக்க முடியும்.