மஹிந்திரா வாகன தயாரிப்பு நிறுவனம், தனது வாகன உற்பத்தியை தற்காலிகமாக 5 முதல் 13 நாட்கள் வரை வெவ்வேறு தொழிற்சாலைகளில் நிறுத்த உள்ளதாக அதிகார்வப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய யூட்டிலிட்டி, வர்த்தக வாகனங்கள் மற்றும் டிராக்டர் தயாரிப்பாளரான மஹிந்திரா நிறுவனம், ”No Production Days” என்பது குறித்த முக்கிய தகவலை BSE-க்கு அளித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மஹிந்திரா உற்பத்தி நிறுத்தம்
2019 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் இந்திய பயணிகள் வாகன சந்தை உட்பட இரு சக்கர வாகன சந்தையும் கடுமையான விற்பனை சரிவினை சந்தித்து வருகின்றது. நாட்டின் மிகப்பெரிய பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசுகி நிறுவனம், 18 சதவீத உற்பத்தியை மே மாதம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் பயணிகள் வாகன விற்பனை முந்தைய எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 17.07 சதவீத மிகப்பெரிய வீழ்ச்சி கண்டுள்ளது. இந்தியாவின் முன்னணி யூட்டிலிட்டி வாகன தயாரிப்பாளரான மஹிந்திரா தனது பெரும்பாலான வாகனங்களின் உற்பத்தியை முழுவதுமாக தற்காலிகமாக குறைந்தபட்சம் 5 நாட்கள் முதல் அதிகபட்சமாக 13 நாட்கள் வரை ஒவ்வொரு ஆலைக்கும் மாறுபட்ட நாட்களில் உற்பத்தியை நிறுத்தி வைக்க உள்ளது.
உற்பத்தி செய்யப்பட்டு கையிருப்பில் உள்ள வாகனங்களை விற்பனை செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கையை மஹிந்திரா நிறுவனம் மேற்கொண்டுள்ளது.