இந்தியாவின் முன்னணி மின்சார கார் தயாரிப்பாளராக விளங்கும் மஹிந்திரா எலெக்ட்ரிக் பிரிவு மின்சார கார்கள் உற்பத்தியை அடுத்த 18 மாதங்களுக்குள் வருடத்திற்கு 60,000 என்ற எண்ணிக்கையில் உயர்த்த திட்டமிட்டுள்ளது. தற்போது e2O, e2O பிளஸ் ஆகிய மாடல்கள் மாதம் 500 எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்படுகின்றது.
மஹிந்திரா எலெக்ட்ரிக்
தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வரும் மின்சார வாகன விற்பனையில் மிக சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ள மஹிந்திரா எலெக்ட்ரிக் பிரிவு தனது பெங்களூரு உற்பத்தி பிரிவு திறனை அடுத்த 18 மாதங்களில் இரட்டிப்பாக உயர்த்தவும், உள்நாட்டில் மின்கலன் மற்றும் மின்சார வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் தயாரிப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதால் உற்பத்தி செலவு கனிசமாக குறையும் வாய்ப்புள்ளது.
சமீபத்தில் இந்தியாவின் எரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட் 10,000 மின்சார கார்களுக்கான ஆர்டரை வழங்கியுள்ள நிலையில், இந்தியாவிலும் சர்வதேச நாடுகளுக்கு இணையான மின்சார கார் விற்பனையை அதிகரிக்கவும், 2030 ஆம் ஆண்டிற்குள் மின்சார வாகனங்களில் தன்னிறைவு அடைய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மஹிந்திரா நிறுவனம் தனிநபர் பயன்பாடு மட்டுமல்லாமல் ஓலா, உபேர் போன்ற வணிகரீதியான சேவைகளை வழங்கும் நிறுவனங்களும் மஹிந்திரா எலெக்ட்ரிக் பிரிவு வாகனங்களை பயன்படுத்தி வருகின்றது.
இந்நிறுவனம் ” அடுத்த சில ஆண்டுகளுக்குள் நாட்டில் மிகப்பெரிய அளவில் உள்நாட்டிலே மின்சார வாகனங்களுக்கான பேட்டரி மற்றும் உதிரிபாகனங்களை 100 சதவீதம் உள்நாட்டிலே உற்பத்தி செய்யும் வகையிலான திட்டங்களை முன்னெடுத்து வருவதாக மஹிந்திரா & மஹிந்திரா நிர்வாக இயக்குநர் பவன் குன்கா தெரிவித்துள்ளார்.