மஹிந்திரா நிறுவனத்தின் மின்சார பேட்டரி வாகனங்களில் அறிமுகம் செய்யப்பட்ட BE 6, XEV 9e என இரு மாடல்களுக்கு முன்பதிவு துவங்கப்பட்ட முதல் நாளிலே 30,179 எண்ணிக்கையை கடந்துள்ளது. எக்ஸ்-ஷோரூம் கட்டணத்தின் அடிப்படையில் தோராயமாக ரூ.8,472 கோடி மதிப்பிற்கு முன்பதிவு நடந்துள்ளதாக மஹிந்திராவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மொத்த முன்பதிவில் 56 % XEV 9e மாடலுக்கும் BE 6 காருக்கு 44% ஆக உள்ளது. மேலும் டாப் 79 kWh பேட்டரியைக் கொண்ட டாப்-எண்ட் பேக் த்ரீ, இரண்டு பிராண்டுகளிலும் மொத்த முன்பதிவுகளில் 73% ஆக உள்ளது.
முதற்கட்டமாக 79 kWh பேட்டரி கொண்ட வேரியண்ட் விநியோகம் மார்ச் 2025 முதல் துவங்க உள்ளது. குறைந்த விலை பேக் ஒன் வகைகள் ஆகஸ்ட் 2025 முதல் துவங்கப்பட உள்ளது. ஜூன் 2025 முதல் பேக் த்ரீ செலக்ட், ஜூலை 2025ல் பேக் டூ விநியோகம் நடைபெற உள்ளது. மேலும் இந்நிறுவனம், முன்பே குறிப்பிட்டபடி, மாதந்தோறும் 5,000 யூனிட்டுகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
மஹிந்திராவின் பிஇ 6 எஸ்யூவி ஆன்ரோடு விலை ரூ.20.36 லட்சம் முதல் துவங்குகின்ற நிலையில், அடுத்து எக்ஸ்இவி 9இ மாடலின் ஆன்ரோடு ஆரம்ப விலை ரூ. 23.54 லட்சம் ஆக துவங்குகின்றது.