இந்தியாவின் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் கீழ் செயல்படும் கிளாசிக் லெஜென்ட்ஸ் தலைமையிலான கூட்டணிக்கு கீழ் உள்ள ஜாவா , பிஎஸ்ஏ போன்ற மோட்டார்சைக்கிள் பிராண்டுகளில், ஜாவா பைக் வரிசை மாடல்களை துரிதமாக உற்பத்தி நிலைக்கு எடுத்துச் செல்ல மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஜாவா பைக்குளில் 300சிசி எஞ்சின்
மஹிந்திரா நிறுவனம் இரு சக்கர வாகன சந்தையில் மிக சிறப்பான வளர்ச்சியை பெறும் நோக்கில் பல்வேறு முதலீட்டு திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது. அவற்றில், குறிப்பாக ஜாவா பிராண்டு பைக்குகளை மீண்டும் இந்திய சந்தையில் நவீனத்துவமான எஞ்சின் அம்சங்களுடன் கிளாசிக் ரக வடிவமைப்பினை பெற்றதாக அறிமுகம் செய்வதற்கான திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள ஆட்டோகார் ப்ரோஃபெஸனல் (autocarpro) இந்தியா இணையதளம், மஹிந்திரா டூ வீலர் பிரிவு அதிகாரிகளின் மிகவும் நம்பதகுந்த ஒருவர் வாயிலாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், மஹிந்திரா நிறுவனம் , ஜாவா பிராண்டில் பைக்குகளை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் மிக தீவரமாக செயற்பட்டு வருவதாகவும், இந்நிறுவனத்தின் பிரபலமான மோஜோ பைக்கில் இடம்பெற்றுள்ள 300சிசி எஞ்சின் மாடலை , வரவுள்ள மோஜோ பைக்கில் பொருத்த வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது. ஜாவா தவிர பி.எஸ்.ஏ பிராண்டு மாடலையும் கையிலெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
சமீபத்தில் மஹிந்திரா நிறுவனம் கார்புரேட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட புதிய மோஜோ யூடி300 பைக் மாடலை அறிமுகம் செய்திருந்த நிலையில் குறைவான விலையை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட உள்ள ஜாவா மாடல்கள் இரண்டு விதமான எஞ்சின் தேர்வுகளுடன் ஜாவா பாரம்பரியத்தை பெற்றதாக கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த வருடத்தின் இறுதி மாதங்கள் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் முதன்முறையாக ஜாவா பைக்குகள் உட்பட பிஎஸ்ஏ மாடல்கள் காட்சிக்கு அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ள நிலையில் விற்பனைக்கு 2019 ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் சந்தையில் கிடைக்கப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மற்றும் புல்லட் 350 என இரு மாடல்களுக்கும் சவாலாக விளங்கும் வகையிலான ஜாவா பைக்குகள் விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.