இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 12 லட்சத்துக்கும் கூடுதலான க்ரெட்டா எஸ்யூவி சாலைகளில் ஓடும் நிலையில், கடந்த ஜனவரி-மார்ச் 2025 வரையிலான மூன்று மாதங்களில் 52,898 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2024-2025 ஆம் நிதியாண்டில் சுமார் 1,94,871 யூனிட்டுகள் விற்பனை ஆகியுள்ளது.
2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஒரு தசாப்தத்தை ஹூண்டாய் க்ரெட்டா நிறைவு செய்வதால், இந்த ஆண்டு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், இது 12 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது.
புதிய மைல்கல் குறித்து ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்டின் முழுநேர இயக்குநரும் தலைமை இயக்க அதிகாரியுமான தருண் கார்க் கூறுகையில்,
“இந்தியாவின் வாகனத் துறையில் ஹூண்டாய் க்ரெட்டா தொடர்ந்து புதிய உயரங்களை எட்டி வருகிறது. எஸ்யூவி சந்தையில் மார்ச் 2025-ல் அதிக விற்பனையான (18,059 யூனிட்) மாடலாக இருப்பது, இந்திய வாடிக்கையாளர்களுடன் அது பகிர்ந்து கொள்ளும் வலுவான உணர்ச்சி பிணைப்பின் அடையாளமாகும். இந்திய சாலைகளில் 1.2 மில்லியனுக்கும் அதிகமான க்ரெட்டாவின் பின்னால் ஒரு தசாப்த கால நம்பிக்கையுடன், ஹூண்டாய் க்ரெட்டா புதுமை, விருப்பம் மற்றும் நம்பகத்தன்மையின் அடையாளமாக மாறியுள்ளது.
க்ரெட்டா மூலம் ஹூண்டாய் இந்தியாவின் மொத்த விற்பனையில் எஸ்யூவிகளின் பங்கு, முந்தைய ஆண்டில் 63.2% ஆக இருந்தது, இது FY2024-25 இல் 68.5% ஆக அதிகரித்துள்ளது.” என குறிப்பிட்டுள்ளார்.
ஹூண்டாய் க்ரெட்டாவின் ஆரம்ப விலை தற்போது ரூ.11.11 லட்சம் முதல் ரூ. 20.50 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது. க்ரெட்டா எலக்ட்ரிக் ரூ.17.99 லட்சத்திலிருந்து ரூ. 23.50 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது.