ஜனவரி 17ல் அறிமுகம் செய்யப்பட உள்ள ஹூண்டாய் க்ரெட்டா எலக்ட்ரிக் காருக்கான பேட்டரி செல்களை இந்தியாவின் எக்ஸைட் எனர்ஜி நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது இதன் காரணமாக இரு நிறுவனங்களுக்கும் இடையே ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது.
ஹூண்டாய் மட்டுமல்ல கியா நிறுவனத்தின் கார்களுக்கும் எக்ஸைட் நிறுவனம் பேட்டரி செல்களை தயாரிக்க உள்ளது.
சீனாவின் பிஒய்டி நிறுவனம் எல்ஜி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களிடமிருந்து பேட்டரி செல்களை பெறுகின்ற நிலையில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பேட்டரி செல்களை பெறுகின்ற முதல் ஆட்டோமொபைல் நிறுவனம் என்று பெருமையை ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் பெறுகின்றது.
ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவின் தலைவரான Heui Won Yang தெரிவிக்கையில், மின்சார வாகனங்களுக்கான முக்கிய சந்தையாக இந்தியா மாற உள்ள நிலையில் உள்ளூரிலேயே உற்பத்தி செய்யப்பட்ட பேட்டரி செல்கள் மற்றும் பல்வேறு மூலப் பொருட்களை பெறுவது மிகப்பெரிய ஒரு சிறந்த முறையாக இருக்கும் என நம்புகின்றோம் எனக் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக எக்ஸைட் எனர்ஜி சொல்யூஷன் நிறுவனத்துடன் ஏற்பட்டுள்ள ஒப்பந்தமானது ஹூண்டாய் மோட்டார் மற்றும் கியா நிறுவனங்களின் எதிர்கால எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரிகளுக்கான செல்களை பெற உள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஹூண்டாய் பயன்படுத்த உள்ள LFP செல்கள் 10,000 சார்ஜிங் சுழற்சிகளை மேற்கொள்ளும் திறன் கொண்டதாகும். இது மற்ற லித்தியம் ஐயன் பேட்டரி செல்களை விட மிக சிறந்த ஒன்றாகும்.
அமர ராஜா AGM பேட்டரி
எலக்ட்ரிக் வாகனங்களை தவிர இதே நேரத்தில் ஹூண்டாய் நிறுவனம் தனது கார்களுக்கான பேட்டரியை அமர ராஜா நிறுவனத்திடம் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட AGM (Absorbent Glass Mat) நுட்பத்தினை கொண்ட பேட்டரிகளை அனைத்து ஹூண்டாய் கார்களுக்கும் பயன்படுத்த உள்ளது.
FY25யின் நான்காவது காலாண்டு முதல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட AGM பேட்டரிகளுடன் வரவுள்ள முதல் உள்ளூர்மயமாக்கப்பட்ட AGM தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முதல் ஆட்டோமொபைல் OEM என்ற பெருமையை பெறுகின்றது.
உள்நாட்டு தயாரிப்பு மற்றும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு உள்நாட்டில் புதுமையான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சி என ஹூண்டாய் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் செயலாளர் மற்றும் இணக்க அதிகாரியாக பிரதீப் சுக்கை நியமித்துள்ளது.