வரும் ஜூன் 16-ந் தேதி முதல் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றியமைக்கப்படும் என எண்ணெனய் நிறுவனங்கள் அறிவித்துள்ள நிலையில் மாறும் விலை அறிவது எப்படி ? என காணலாம்.
பெட்ரோல், டீசல் விலை
நமது நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை 15 நாள்களுக்கு ஒரு முறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்துவருகின்ற நிலையில் ஜப்பான் , அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளில் தினமும் பெட்ரோலிய பொருட்களின் விலை மாற்றம் செய்யப்படுகின்றன. மேலும் கொரியா, தாய்வான் போன்ற சில நாடுகளில் வாரத்தில் ஒருமுறை மாற்றம் செய்யப்படுகின்றது.
கடந்த மே 1-ந் தேதி ஆரம்ப கட்டமாக புதுச்சேரி, விசாகப்பட்டினம், உதய்ப்பூர், ஜாம்ஷெட்பூர், சண்டிகர் ஆகிய ஐந்து நகரங்களில் சோதனையின் அடிப்படையில் மாற்றியமைக்கப்பட்டது. அதன் விபரங்களை அடிப்படையாக கொண்டே நாடு முழுவதும் ஜூன் 16ந் தேதி முதல் மாற்றம் செய்யப்பட உள்ளது.
தினமும் பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு உயரும் ?
இந்த முறை நடைமுறை வரும்பொழுது பெட்ரோல், டீசல் மற்றும் மற்ற பெட்ரோலிய பொருட்கள் விலையில் தினமும் சில பைசாக்கள் முதல் ரூபாய்கள் வரை குறையவும் அல்லது ஏறும். ஆனால் விலையில் பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்காது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு சிரமம் ஏற்பட வாய்ப்பில்லை, என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
பெட்ரோல், டீசல் விலை அறியலாம்
தினசரி பெட்ரோல், டீசல் விலை மாற்றத்தை அறிந்து கொள்ள பின்வரும் நடைமுறைகளை கடைபிடிக்கலாம்.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ஸ்மார்ட்போன் பயனாளர்களுக்கு Fuel@IOC என்ற ஆப் வாயிலாகவோ அல்லது RSP < SPACE > DEALER CODE to 92249-92249 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியும் அறிந்து கொள்ளலாம்.
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் “HPPRICE < SPACE > DEALER CODE” to 9222201122 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி அறிந்து கொள்ளலாம்.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் “RSP <SPACE > DEALER CODE” to the number 9223112222 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், 1800 22 4344 என்ற இலவச ஹாட் லைன் எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.
இந்தியாவில் செயல்படுகின்ற மொத்த பெட்ரோல் நிலையங்களில் 95 சதவித பங்களிப்பை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெற்றுள்ளது. அதாவது நாட்டில் மொத்தமாக 56,190 பெட்ரோலிய டீலர்கள் செயல்படுவதில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் கீழ் சுமார் 52,604 பங்க்குகள் செயல்படுகின்றது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 4850 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்ளன.