இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனமாக தொடங்கப்பட்ட ஏதெர் எனர்ஜி மிக சிறப்பான வகையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்ற நிலையில் தற்போது 8 வருடம் அல்லது 80 ஆயிரம் கிலோ மீட்டர் வரை பேட்டரி உத்தரவாதத்தை வழங்கும் வகையிலான புதிய Eight70TM திட்டத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளது.
முன்பாக ஏத்தரின் ப்ரோ பிளானில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஐந்து வருடம் அல்லது 60 ஆயிரம் கிலோமீட்டர் வரையிலான வாரண்டி திட்டத்தை செயல்படுத்தி வந்தது. அதே புரோ பேக்கில் உள்ள வாடிக்கையாளர்கள் ரூபாய் 4999 கூடுதல் கட்டணமாக செலுத்தினால் எட்டு வருடம் அல்லது 80 ஆயிரம் கிலோ மீட்டர் வரை வாரண்டியை நீட்டித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த Eight70TM திட்டத்தில் மிக முக்கியமான ஒரு அம்சம் என்னவென்றால் எட்டு வருடங்கள் அல்லது 80 ஆயிரம் கிலோ மீட்டர் கடந்த பிறகும் பேட்டரியின் சார்ஜிங் தரம் சதவீதம் 70 சதவீதத்திற்கும் கீழ் குறைந்தாலும் வாரண்டியில் பேட்டரியை மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
கூடுதலாக இரண்டாவது வாடிக்கையாளராக இந்த ஸ்கூட்டரை வாங்கி இருந்தாலும் கூட பேட்டரி வாரண்டி பொருந்தும் அதே நேரத்தில் நீண்ட காலமாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இயங்காமல் இருந்து பேட்டரி சிறப்பான செயல்பாட்டினை வெளிப்படுத்தாமல் போனால் கூட இந்த வாரண்டி பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.
ஏத்தரின் தலைமை வணிக அதிகாரி ரவ்னீத் சிங் ஃபோகேலா கூறுகையில், “EV வாங்குபவர்களுக்கு பேட்டரி ஆயுள் ஒரு முக்கியமான காரணியாகும். வாடிக்கையாளர்களின் மின்சார ஸ்கூட்டர்களின் பேட்டரிகளின் ஆயுட்காலம் மற்றும் மாற்றுவதற்கான செலவுகள் குறித்த எழுகின்ற அச்சத்தை பற்றி கேள்விப்படுகிறோம். இந்தக் கவலையைப் புரிந்துகொண்டு, எங்களின் புதிய Eight70TM வாரண்டியை அறிமுகப்படுத்தியுள்ளோம், இது 8 ஆண்டுகள் வரை 70% பேட்டரி ஆரோக்கிய உத்தரவாதத்தை வழங்குகிறது. இந்த உத்தரவாதமானது EV வாங்குபவர்கள் தங்கள் ஸ்கூட்டர் பேட்டரிகளின் நீண்ட கால ஆரோக்கியம் குறித்து கொண்டிருக்கும் கவலைகளை நீக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். என குறிப்பிட்டுள்ளார்.