இந்தியாவின் முதன்மையான தயாரிப்பாளரான மாருதி சுசூகி நிறுவனம், துவக்க மாதங்களில் புதிய ஸ்விஃப்ட், டிசையர் உட்பட முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி ஆகியவற்றுடன் 7 இருக்கை கிராண்ட் விட்டாரா மற்றும் பல்வேறு புதுப்பிக்கப்பட்ட மாடல்கள் விற்பனைக்கு வெளியாக வாய்ப்புள்ளது.
ஜப்பான் சந்தையில் ஏற்கனவே புதிய ஸ்விஃப்ட் வெளியானதை தொடர்ந்து இந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது.
2024 Maruti Suzuki Swift
2024 ஆம் ஆண்டிற்கான மாருதி ஸ்விஃப்ட் புதிதாக பெற உள்ள மூன்று சிலிண்டர் Z12E பெட்ரோல் என்ஜின் 5,700rpm-ல் 82hp மற்றும் 4,500rpm-ல் 108Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. மைல்டு ஹைபிரிட் பெற உள்ளதால் 3.1hp மற்றும் 60Nm டார்க் வழங்கும் மோட்டார் இடம்பெற்றுள்ளது. இந்திய சந்தையில் 5 வேக மேனுவல் மற்றும் ஏஜிஎஸ் எனப்படும் ஏஎம்டி கியர்பாக்ஸ் என இரு விதமான ஆப்ஷனை பெற உள்ளது.
பல்வேறு புதிய நிறங்கள் டிசைன் மாற்றங்களை பெற உள்ள ஸ்விஃப்ட் காரில் கனெக்ட்டிவ் வசதிகள் மற்றும் தொடர்ந்து இடவசதி அடிப்படையான பாதுகாப்பு கட்டமைப்பு மேம்படுத்தப்பட உள்ளது.
2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் விற்பனைக்கு வரவிருக்கும் மாருதி சுசூகி ஸ்விஃப்ட் கார் விலை ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது.
2024 Maruti Suzuki Dzire
2024 ஆம் ஆண்டு இரண்டாம் அல்லது மூன்றாம் காலாண்டில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற செடான் ரக டிசையர் கார் புதிய ஸ்விஃப்ட் அடிப்படையில் வெளியிடப்பட உள்ளது. இந்த மாடலில் தொடர்ந்து புதிய Z12E பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.
இந்தியாவின் சிறந்த செடான் மாடலாக விளங்குகின்ற சுசூகி டிசையர் காரில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மேனுவல் என இரு ஆப்ஷனையும் பெற்றிருக்கலாம். இன்டிரியரில் ஸ்விஃப்ட் காரை போலவே தொடுதிரை வசதியுடன் கூடிய 9 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்றதாக அமைந்திருக்கலாம்.
2024 மாருதி சுசூகி டிசையர் கார் விலை ரூ.6.80 லட்சம் முதல் துவங்கி ரூ.10 லட்சத்துக்குள் நிறைவடையலாம்.
Maruti Suzuki eVX
மாருதி சுசூகி முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல் முன்பாக காட்சிப்படுத்தப்பட்ட eVX கான்செப்ட் அடிப்படையில் இரண்டு விதமான பேட்டரி பேக் பெற்று டொயோட்டாவின் 27PL எலக்ட்ரிக் ஸ்டேக்போர்டு பிளாட்ஃபாரத்தில் வரவுள்ளது.
மாருதி eVX இரண்டு பேட்டரி விருப்பங்களுடன் பொருத்தப்பட்டிருக்கும், ஏற்கனவே ஆட்டோ எக்ஸ்போ 2023 அரங்கில் தெரிவிக்கப்பட்ட படி, ஏறக்குறைய 550 கிமீ தூரம் செல்லும் வாகனம் 60 kWh பேட்டரியைக் கொண்டிருக்கும். மற்றொன்ரு குறைந்த ரேஞ்ச் வழங்கும் வகையில் 48Kwh பேட்டரி பெற்றிருக்கலாம்.
மாருதி சுசூகி குஜராத் ஆலையில் தயாரிக்கப்பட உள்ள eVX கார் இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இவிஎக்ஸ் எலக்ட்ரிக் காரின் விலை ரூ.20 லட்சம் விலைக்குள் துவங்கி ரூ.25 லட்சத்துக்குள் நிறைவடையலாம். இந்த மாடல் 2024 ஆம் ஆண்டின் இறுதி அல்லது 2025 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் விற்பனைக்கு வெளியிடப்படலாம். இந்த மாடல் சுசூகி மட்டுமல்லாமல் டொயோட்டா நிறுவனமும் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.
7 seater Maruti Suzuki Grand Vitara
இந்திய சந்தையில் பிரபலமாக உள்ள டொயோட்டா-சுசூகி கூட்டணியில் தயாரிக்கப்பட்ட அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மற்றும் மாருதி கிராண்ட் விட்டாரா மாடல்கள் 5 இருக்கை பெற்றதாக விற்பனைக்கு கிடைத்து வருகின்றது. இந்த மாடல்களின் அடிப்படையில் 6 மற்றும் 7 இருக்கை கொண்டதாக கிராண்ட் விட்டாரா ஆனது புதிய பெயரை பெற்றதாக வரக்கூடும்.
கிராண்ட் விட்டாரா மாடலில் மைல்ட் ஹைப்ரிட் பவர்டிரெய்ன் ஆப்ஷனில் 1.5-லிட்டர், 4 சிலிண்டர் K15C பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 102 hp மற்றும் 137 டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது. அடுத்து ஹைப்ரிட் என்ஜின் 78 bhp பவர், 141 Nm டார்க் வழங்கும் மின்சார மோட்டாருடன் 91 bhp மற்றும் 122 Nm டார்க் கொண்டு 1.5-லிட்டர், 4-சிலிண்டர் பெட்ரோல் என இரண்டும் இணைந்து செயல்பட்டு அதிகபட்சமாக 115.56 hp பவரை வழங்குகின்றது. இந்த மாடலில் இ-சிவிடி கியர்பாக்ஸ் உள்ளது.
இதே என்ஜின் ஆப்ஷனை தொடர்ந்து பெற்றதாக வரவுள்ள 7 இருக்கை பெற்ற மாருதி சுசூகி கிராண்ட் விட்டாரா எஸ்யூவி கார் 2024 ஆம் ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கலாம்.
இதுதவிர மாருதி சுசூகி நிறுவனம் பல்வேறு ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் மற்றும் கூடுதல் பாதுகாப்பு வசதிகள் பெற்ற மாடல்கள் வரவுள்ளன.