சர்வதேச அளவில் டொயோட்டா பேட்டரி எலெக்ட்ரிக் வாகன விற்பனை அடுத்த ஆண்டு முதல் தொடங்க உள்ள நிலையில், இந்திய சந்தையிலும் மின்சார கார்களை விற்பனைக்கு கொண்டு வருவதனை டொயோட்டாவின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஷிகேகி டெராஷி உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டொயோட்டா தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஷிகேகி டெராஷி, “பி.இ.வி (BEVs-Battery Electric Vehicles ) அறிமுகம் செய்ய இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். டொயோட்டா இந்தியாவின் முதல் மின்சார கார் மாருதி சுசுகியுடன் இணைந்து உருவாக்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, இவர் குறிப்பிட்டுள்ளபடி, மாருதி சுசுகியுடன் இணைந்து உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வரவுள்ள மாடலின் பிளாட்ஃபாரம் மற்றும் பவர் ட்ரெயின் போன்றவற்றை பகிர்ந்து கொள்ள உள்ளன. சுசுகி நிறுவனம் வேகன் ஆர் காரில் எலெக்ட்ரிக் பவர்ட்ரெயினை பொருத்தி சோதனை செய்து வருகின்றது.
இந்திய சந்தையில் மாருதி சுசுகி நிறுவனம், சாலை சோதனை செய்து வருகின்ற வேகன் ஆர் EV அதிகபட்சமாக 130 கிமீ ரேஞ்சுடன் ஏசி மற்றும் டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷனுடன் வரக்கூடும். இந்த காருக்கு மத்திய அரசின் ஃபேம் இரண்டாம் கட்ட சலுகைகளும் வழங்கப்பட உள்ளது. ஆனால், தனிநபர் பயன்பாட்டு வாகனங்களுக்கு ஃபேம் சலுகை வழங்கப்படாது.
டோக்கியா மோட்டார் ஷோவில் டொயோட்டா நிறுவனம், தனது அல்ட்ரா காம்பாக்ட் BEV காரை வெளியிட உள்ளது. இந்த கார் இரண்டு இருக்கைகள் பெற்று அதிகபட்ச வேகம் மணிக்கு 100 கிமீ ஆகவும், சிங்கிள் சார்ஜில் 60 கிமீ பயணிக்கும் திறன் கொண்டிருக்கும்.
டொயோட்டா-சுசுகி கூட்டணி நிறுவனங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, டொயோட்டா நிறுவனம், மாருதியின் பலேனோ காரை கிளான்ஸா என்ற பெயரில் விற்பனை செய்ய துவங்கியுள்ளது. இந்தியாவில் டொயோட்டா BEVs 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வெளியாகும்.