டெஸ்லா எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பளரின் முதல் பிக்கப் டிரக் மாடலான சைபர்டிரக் வாகனத்திற்கு முன்பதிவு தொடங்கப்பட்ட நான்கு நாட்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான் முன்பதிவுகளை பெற்றதாக இந்நிறுவன தலைவர் எலான் மஸ்க் உறுதிப்படுத்தியுள்ளார்.
நவம்பர் 23 ஆம் தேதி டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் வெளியிட்ட ஒரு ட்வீட்டில், “இதுவரை 146,000 சைபர்டிரக் ஆர்டர்களை பெற்றிருப்பதாகவும், 42% இரட்டை எலெக்ட்ரிக் மாடல், 41% டிரியோ மற்றும் 17% ஒற்றை மோட்டார் மாடல் என குறிப்பிட்டிருந்தார். நவம்பர் 25 ஆம் தேதி வெளியிட்ட மற்றொரு ட்வீட்டில், மஸ்க் இந்த எண்ணிக்கை 2,00,000 ஆக உயர்ந்துள்ளது என்பதை உறுதிப்படுத்தினார்.
சைபர்டிரக் மாடலில் மூன்று விதமான மின்சார பவர் ட்ரெயினை பெற உள்ளது. ஒற்றை மோட்டார் கொண்ட ரியர் வீல் டிரைவ் முழுமையான சிங்கிள் சார்ஜில் 402 கிமீ ரேஞ்சு வழங்க வல்லதாக விளங்கும். மேலும் 0-96 கிமீ வேகத்தை 6.5 விநாடிகளில் எட்டும் திறனை கொண்டிருக்கும். இந்த வேரியண்ட் அதிகபட்சமாக 3400 கிலோ திறனை இழுக்கும் சக்தியை கொண்டிருக்கும்.
அடுத்து, இரண்டு மோட்டார் கொண்ட ஆல் வீல் டிரைவ் முழுமையான சிங்கிள் சார்ஜில் 482 கிமீ ரேஞ்சு வழங்க வல்லதாக விளங்கும். இந்த வேரியண்ட் அதிகபட்சமாக 4535 கிலோ திறனை இழுக்கும் சக்தியை கொண்டிருக்கும். மேலும் 0-96 கிமீ வேகத்தை 4.5 விநாடிகளில் எட்டும் திறனை கொண்டிருக்கும்.
இறுதியாக, உயர்தரமான மூன்று எலெக்ட்ரிக் மோட்டார் பெற்ற ஆல் வீல் டிரைவ் முழுமையான சிங்கிள் சார்ஜில் 804 கிமீ ரேஞ்சு வழங்க வல்லதாக விளங்கும். மேலும் 0-96 கிமீ வேகத்தை 2.9 விநாடிகளில் எட்டும் திறனை கொண்டிருக்கும்.
6 இருக்கைகளை பெற்ற சைபர் டிரக் மாடலில் 1.5 டன் எடை தாங்கும் திறனுடன், மூன்று மோட்டார் பெற்ற மாடல் 6.4 டன் எடையை இழுத்துச் செல்லும் திறன் கொண்டதாகவும் விளங்க உள்ளது. ஏறக்குறைய உற்பத்திக்கு சைபர் டிரக் மாடல் 2021 ஆம் ஆண்டு செல்ல உள்ளது.
அமெரிக்காவில் சைபர்டிரக் விலை ரூ.28 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை அமைந்துள்ளது.