டாடா மோட்டார்சின் பயணிகள் வாகன பிரிவினை மாற்றியமைத்த பெருமைக்குரிய டாடா இன்டிகா, டாடா இன்டிகோ eCS ஆகிய இரு மாடல்களும் சந்தையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. டாக்சி சந்தையில் ராஜாவாக விளங்கிய இன்டிகா காரின் குறைந்த விற்பனையின் காரணமாக மட்டும் நீக்கப்பட்டுள்ளது.
டாடா இன்டிகா, இன்டிகோ eCS
கடந்த 1998 ஆம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இன்டிகா மிக சிறப்பான இடவசதியுடன், சந்தையிலிருந்த பிரசத்தி பெற்ற மாருதி 800, மாருதி ஜென் மற்றும் அம்பாசிடர் உள்ளிட்ட மாடல்களுக்கு எதிராக மிக சவாலான விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டது.
அறிமுகம் செய்த குறைந்த நாளில் 1,00,000 அதிகமான முன்பதிவினை பெற்று சாதனை படைத்திருந்த இன்டிகா கார் மிக சிறப்பான ஆரம்பகட்ட வளர்ச்சியை பெற்று வந்த நிலையில், காலப்போக்கில் டாக்சி சந்தைக்கு ஏற்ற மாடலாக மாறியது. இந்தியாவின் முதல் காம்பேக்ட் ரக செடான் மாடலாக வெளியான இன்டிகோ eCS காரும் விற்பனையில் வளர்ச்சி பெற்றது.
மாறிவரும் சந்தை சூழ்நிலைக்கு ஏற்ப டாடா மோட்டார்ஸ் இன்டிகா மற்றும் இன்டிகோ காரின் அடிப்படையில் போல்ட் மற்றும் ஜெஸ்ட் ஆகிய மாடல்களை வெளியிட்டது. ஆனால் இவ்விரு மாடல்களும் பெரிதான விற்பனை எண்ணிக்கையை எட்டியிராத நிலையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா டியாகோ மற்றும் டாடா டீகோர் செடான் சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றது.
கடந்த 2017-2018 ஆம் ஆண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்டிகா 2583 கார்களை விற்பனை செய்திருந்த நிலையில், இன்டிகோ eCS கார் 1756 எண்ணிக்கையில் விற்பனை செய்திருந்தது. சரிந்து வரும் விற்பனையின் காரணமாக இன்டிகோ, இன்டிகோ இசிஎஸ் மாடல்களை சந்தையிலிருந்து நீக்கியுள்ளது.