முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் தலைமையின் கீழ் தமிழ்நாடு எலக்ட்ரிக் வாகனங்ளுக்கான மையமாக செயல்பட மிக சிறப்பான திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், தற்பொழுது 400க்கு மிக குறைவாக உள்ள மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களின் எண்ணிக்கையை 2000 ஆக உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 2023 மாத இறுதி கணக்கின்படி தமிழ்நாட்டில் 4.14 லட்சம் பேட்டரி மின்சார வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளது.
TN EV charging stations
சென்னையில் ஆட்டோகார் புரபெஷனல் இதழ் நடத்திய இந்தியா இவி மாநாட்டில் பேசிய தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பேசுகையில், தற்போது, மாநிலத்தில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் நிலையங்கள் போதுமானதாக எங்களிடம் இல்லை. ஆனால் மிக குறுகிய காலத்தில், மாநிலத்தின் சார்ஜிங் உள்கட்டமைப்பில் பல மடங்கு விரிவாக்கத்தை நீங்கள் காணப் போகிறீர்கள், என குறிப்பிட்டார்.
மேலும், 2019 வருடம் வெளியிடப்பட்ட நமது மாநிலத்தின் மின்சார வாகனக் கொள்கையின்படி, மாநிலம் முழுவதும் நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைகளில் ஒவ்வொரு 25 கிலோமீட்டருக்கும் ஒரு மின் வாகன சார்ஜிங் நிலையங்களை நிறுவுவது கட்டாயமாகும்.
மின் வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை நிறுவ நெடுஞ்சாலைகளில் பொருத்தமான இடங்களை அடையாளம் காணும் பொறுப்பை தமிழ்நாடு மின் விநியோக நிறுவனத்திற்கு (TANGEDCO) அரசு ஒப்படைத்துள்ளது. முதற்கட்டமாக விரைவில் 100 நிலையங்களை நிறுவ இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதனால் நடப்பு நிதியாண்டின் இறுதியில், இதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியகும்.
கூடுதலாக மாநிலத்தில் உள்ள அனைத்து சார்ஜிங் நிலையங்களையும் ஒருங்கிணைக்கும் EV இணையதளத்தை தொடங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் EV வாகனங்களுக்கான தலைநகரமாக நாங்கள் மாற திட்டமிட்டுள்ளதால், அதற்கான அடிப்படை கட்டமைப்பான நுகர்வோருக்கு அதிக சார்ஜிங் நிலையங்களை வழங்குவதன் மூலமும், ரேஞ்ச் தொடர்பான கவலைகளை நீக்கினால் அதிக வாடிக்கையாளர்கள் மின்சார வாகனங்களை தேர்ந்தெடுப்பார்கள் என அமைச்சர் டி.ஆர்.பி ராஜா குறிப்பிட்டுள்ளார்.
மாநில அரசுடன் தமிழ்நாடு அரசின் மின்சாரம் மற்றும் விநியோகப் பிரிவான தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) இணைந்து எண்ணெய் விற்பனை நிறுவனங்களுடன் நெருக்கமாக இணைந்து செயல்பட்டு மாநிலத்தில் EV பயன்பாட்டை மேம்படுத்துவதற்கான பொது மற்றும் தனியார் போக்குவரத்துக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த செயல்பட்டு வருகின்றன.