வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி ரூ. 5 லட்சத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ரெனோ ட்ரைபர் எம்பிவி காரின் முன்பதிவு ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் தொடங்குகின்றது. விற்பனைக்கான ட்ரைபரின் உற்பத்தியை இந்நிறுவனம் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற குறைந்த விலை எம்பிவி ரக மாடல் மாருதி எர்டிகா உட்பட பலேனோ போன்ற பிரீமியம் ஹேட்ச்பேக்குகள் மற்றும் மைக்ரோ எஸ்யூவி மாடல்களை எதிர்கொள்ளும் நோக்கத்தில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
4 மீட்டருக்கு குறைவான நீளத்தை பெற்ற மாடலாக வெளியாக உள்ள ட்ரைபரில் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போ சார்ஜ்டு விவிடி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக 72 ஹெச்பி பவர் மற்றும் 96 என்எம் டார்க் வரை வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உட்பட 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் என இரு விதமாக கிடைக்க உள்ளது.
இந்த காரின் மைலேஜ் லிட்டருக்கு 20.5 கிமீ வழங்கும் என ஆராய் அமைப்பு சான்றிதழ் வழங்கியுள்ளது.
ட்ரைபர் மாடலின் சென்ட்ரல் கன்சோலில் வழங்கப்பட்டுள்ள 8 இன்ச் தொடு திரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆனது ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உட்பட யூஎஸ்பி வாயிலாக வீடியோ பிளே செய்யும் ஆப்ஷனை வழங்கியுள்ளது. ஓட்டுநருக்கு வழங்கப்பட்டுள்ள 3.5 அங்குல எல்சிடி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் ஓடோமீட்டர், ஸ்பீடோமீட்டர், எரிபொருள் அளவு, உட்பட என்ஜின் வெப்பம் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம்.
அனைத்து வேரியண்டுகளிலும் ஏபிஎஸ், ஏர்பேக் நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டிருப்பதுடன் டாப் வேரியண்டில் மட்டும் அதிகபட்சமாக நான்கு ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளது.
வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி முன்பதிவு தொடங்கப்பட உள்ள ரெனோ ட்ரைபர் காரின் விலை ரூ.5 லட்சம் முதல் 7.80 லட்சத்திற்குள் அமையலாம். ட்ரைபரின் விலை ஆகஸ்ட் 28 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.