பட்ஜெட் விலையில் விற்பனை செய்யப்படுகின்ற 7 இருக்கை பெற்ற ரெனோ ட்ரைபர் எம்பிவி ரக மாடலில் கூடுதலாக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றதாக விற்பனைக்கு அடுத்த சில வாரங்களுக்குள் வெளியாக உள்ளது.
நாட்டின் பெரும்பாலான நகரங்களில் டீலர்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை நிறுவனங்கள் தங்கள் பணியை குறைந்த அளவிலான ஊழியர்களை துவங்கியுள்ள நிலையில் அடுத்தடுத்து முன்பே திட்டமிடப்பட்ட அறிமுகங்கள் வெளியாக உள்ளன. அந்த வகையில் ட்ரைபர் ஏஎம்டி முதன்முறையாக ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் காட்சிக்கு கொண்டு வரப்பட்டது.
ட்ரைபர் காரில் இடம்பெற்றுள்ள 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர், பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 72 ஹெச்பி பவர் மற்றும் 96 என்எம் டார்க் வரை வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றதாக கிடைக்கின்றது. கூடுதலாக தற்போது 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் (Easy R-AMT) பெறுகின்றது.
டாப் வேரியண்டில் 8 அங்குல தொடு திரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உட்பட யூஎஸ்பி வாயிலாக வீடியோ பிளே செய்யும் ஆப்ஷனை வழங்கியுள்ளது. ஓட்டுநருக்கு வழங்கப்பட்டுள்ள 3.5 அங்குல எல்சிடி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் ஓடோமீட்டர், ஸ்பீடோமீட்டர், எரிபொருள் அளவு, உட்பட என்ஜின் வெப்பம் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம்.
ட்ரைபர் ஏஎம்டி மாடல் RxL, RxT மற்றும் RxZ போன்றவற்றின் அடிப்படையில் விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளது. மேனுவல் கியர்பாக்ஸ் மாடலை விட ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை விலை கூடுதலாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ரெனால்ட் ட்ரைபர் ஏஎம்டி மாடல் விலை ரூ.6.25 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.7.50 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலைக்குள் அமைய வாய்ப்புள்ளது. ஊரடங்கு உத்தரவு தளர்வுக்குப் பின்னர் மே 18 ஆம் தேதி அனேகமாக விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.