பெங்களூருவை சேர்ந்த பிராவைங் டைனமிக்ஸ் ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் எக்ஸ்டின்ஷன் எம்கே1 (Pravaig Extinction MK1) மேக் இன் இந்தியா முறையில் தயாரிக்கப்பட்ட ஆடம்பர எலக்ட்ரிக் கார் மாடலாகும். டெஸ்லா கார்களுக்கு சவால் விடுக்கும் இந்திய தயாரிப்பாக விளங்குகின்றது.
9 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட Pravaig Dyanmics நிறுவனம், தயாரிக்க உள்ள முதல் எக்ஸ்டின்ஷன் எம்கே1 மின்சார காரில் சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 504 கிமீ பயணிக்கும் திறனை கொண்டிருக்கின்றது.
இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வரும் நிலையில் மெர்சிடிஸ்-பென்ஸ் EQC, ஹூண்டாய் கோனா இவி, எம்ஜி இசட்எஸ் இவி,டாடா நெக்ஸான் இவி உட்பட மஹிந்திரா இவெரிட்டோ, டிகோர் இவி ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், 2021 ஆம் ஆண்டில் பல்வேறு கார்கள் வரவுள்ள நிலையில் பிராவைங் நிறுனமும் மிக முக்கிய கவனத்தை பெற்றுள்ளது.
Pravaig Extinction MK1
தோற்ற அமைப்பில் மிகுந்த கவனத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள எக்ஸ்டின்ஷன் எம்கே 1 காரில் 96 KWh பேட்டரி பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 201 BHP பவர், 2400 Nm டார்க் வழங்குவதுடன், ஒரு முறை பேட்டரியை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 504 கிமீ பயணிக்கும் திறனை கொண்டிருக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எக்ஸ்டின்சன் MK1 மணிக்கு 196 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன் விளங்கும் நிலையில், 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 5.4 விநாடிகள் மட்டும் எடுத்துக் கொள்ளும். விரைவு சார்ஜிங் நுட்பத்தின் வாயிலாக 80 சதவீத சார்ஜ் வெறும் 30 நிமிடங்களில் ஏறிவிடும்.
இந்திய சந்தையில் அடுத்த ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு முதற்கட்டமாக பெங்களூரு மற்றும் டெல்லியில் உள்ள வர்த்தக ரீதியான பயன்பாட்டாளர்களுக்கு ஆரம்ப நிலையில் விற்பனைக்கு கொண்டு வரவும், படிப்படியாக தனிநபர் பயன்பாடு உட்பட நாடு முழுவதும் விரிவுப்படுத்த பிராவைங் திட்டமிட்டுள்ளது.