நிசான் இந்தியா நிறுவனத்தின் மேக்னைட் எஸ்யூவி மாடலுக்கான முன்பதிவு மற்றும் விற்பனை துவங்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் அதிகபட்சமாக 32 வாரங்கள் வரை டெலிவரி பெற காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
ரூ.4.99 லட்சம் முதல் ரூ.9.59 லட்சம் அறிமுக சலுகை விலையில் வெளியிடப்பட்ட மேக்னைட் எஸ்யூவி காருக்கான சலுகை டிசம்பர் 31, 2020 வரை மட்டுமே பொருந்தும். அதற்கு பிறகு ஜனவரி 1, 2021-க்கு பிறகு வேரியண்ட் வாரியாக ரூ.50,000 வரை உயர்த்தப்பட உள்ளதால், முன்பதிவு எண்ணிக்கையில் போட்டியாளர்களான கியா சொனெட், விட்டாரா பிரெஸ்ஸா, வென்யூ, எக்ஸ்யூவி 300, நெக்ஸான், அர்பன் க்ரூஸர் மற்றும் ஈக்கோஸ்போர்ட் ஆகியவற்ற்றை எதிர்கொள்ளுகின்றது.
இந்த காரில் XE, XL, XV Upper மற்றும் XV Premium என 4 வேரியண்டில் 20 வகையான மாறுபாடுகளில், இரண்டு விதமான இன்ஜின் ஆப்ஷனை பெற்றுள்ளது. பெட்ரோல் மற்றும் டர்போ பெட்ரோல் ஆப்ஷனை கொண்டுள்ளது.
100 hp பவரை 5,000rpm மற்றும் 160 Nm டார்க் 2,800-3,600 rpm-ல் (152Nm – CVT) வழங்குகின்ற 1.0 லிட்டர் HRA0 டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
சாதாரண 1.0 லிட்டர் B4D பெட்ரோல் இன்ஜின் 72hp பவரை 6,250rpm-லும், 96 Nm டார்க்கினை 3,500rpm-ல் வழங்கக்கூடிய மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் உள்ளது.
குறிப்பாக பேஸ் மேக்னைட் XE வேரியண்டிற்கு 32 வாரங்கள் அதாவது 8 மாதங்களாக உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக, டர்போ XV வேரியண்டிற்கு 26 வாரங்களாக உள்ளது. டாப் டர்போ வேரியண்ட் 5 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும் என தெரிய வந்துள்ளது.