நிஸான் இந்தியா நிறுவனத்தின் புதிய மேக்னைட் எஸ்யூவி காரின் முன்பதிவு துவங்கப்பட்ட 5 நாட்களில் 5,000 ஆயிரத்துக்கும் கூடுதலான முன்பதிவுகளை பெற்று அசத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 2ஆம் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட்ட மேக்னைட்டின் அறிமுக ஆரம்ப விலை ரூ.4.99 லட்சத்தில் துவங்குகின்றது.
4 மீட்டருக்கு குறைவான நீளம் பெற்ற காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் கடுமையான போட்டியாளர்களுக்கு மத்தியில் வெளியான மேக்னைட்டிற்கு அறிமுகம் செய்யப்பட்ட நாள் முதல் 50,000 விசாரிப்புகளுடன், 5,000 புக்கிங் உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக புக்கிங் செய்தவர்கள் 40 % ஆன்லைன் வழியாக பதிவு செய்துள்ளதாக இந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ.11,000 வசூலிக்கப்படுகின்றது.
நிஸான் மேக்னைட் இன்ஜின்
மேக்னைட் காரில் 1.0L B4D பெட்ரோல் மற்றும் டாப் வேரியண்டில் 1.0L HRA0 டர்போ பெட்ரோல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷனை சேர்க்கப்பட்டுள்ளது.
குறைந்த விலை வேரியண்டில் இடம்பெற்றுள்ள 1.0 லிட்டர் B4D பெட்ரோல் இன்ஜின் 72hp பவர் 6,250rpm-லும், 96 Nm டார்க் 3,500rpm-ல் வழங்கக்கூடியதாக உள்ள இந்த மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் உள்ளது.
இந்த இன்ஜின் அதிகபட்சமாக லிட்டருக்கு 18.75 கிமீ மைலேஜ் வழங்கும் என ARAI சான்றிதழ் வழங்கியுள்ளது.
அதிகபட்சமாக 100 hp பவர் 5,000rpm மற்றும் 160 Nm டார்க் 2,800-3,600 rpm-ல் (152Nm – CVT வேரியண்ட்) வழங்குகின்ற 1.0 லிட்டர் HRA0 டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
மேனுவல் கியர்பாக்ஸ் மைலேஜ் லிட்டருக்கு 20 கிலோமீட்டர் எனவும், சிவிடி கியர்பாக்ஸ் கொண்ட மாடல் லிட்டருக்கு 17.7 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என ARAI சான்றிதழ் வழங்கியுள்ளது.
மேக்னைட் ரேட்
ரூ.4.99 லட்சத்தில் துவங்கும் நிஸான் மேக்னைட் எஸ்யூவி காரின் டாப் வேரியண்ட் ரூ.9.35 லட்சம் விலையாக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அறிமுக ஆரம்ப விலை டிசம்பர் 31,2020 வரை மட்டுமே பொருந்தும். அதன் பிறகு வேரியண்ட் வாரியாக ரூ.50,000 உயர்த்தப்பட உள்ளது. கூடுதலாக இந்நிறுவனம் வழங்குகின்ற டேக் பேக் கட்டணம் ரூ.39,000 கூடுதலாக வசூலிக்கப்படும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.