வரும் ஏப்ரல் 1, 2020 முதல் பிஎஸ் 6 மாசு விதிமுறை அமலுக்கு வருவதனை தொடர்ந்து, இந்தியாவின் முதன்மையான கார் தயாரிப்பாளரான மாருதி சுசூகி சேர்மென் R.C. பார்கவா கூறுகையில் டீசல் கார் விலை மிக கடுமையாக உயரக்கூடும் என குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாருதி சுசூகி நிறுவனத்தின் சேர்மென் R.C. பார்கவா பேசுகையில், பிஎஸ் 6 நடைமுறை, டீசல் கார் விலை உயர்வு மற்றும் டீசல் காருக்கு மாற்றாக ஹைபிரிட் மற்றும் சிஎன்ஜி வாகனங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளதாக கூறியுள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், பிஎஸ் 4 வாகனங்கள் ஏப்ரல் 1, 2020 க்கு பிறகு விற்பனை செய்ய இயலாது என உறுதிப்படுத்தியுள்ளது. எனவே நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளராக விளங்கும் மாருதி சுசூகி பிஎஸ் 4 மாசு விதிகளுக்கு உட்பட்ட வாகனங்களை டிசம்பர் 2019 இறுதி வாரத்தில் நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், ஜனவரி 2020 முதல் பிஎஸ் 6 வாகனங்கள் மட்டும் உற்பத்தி செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் டீசல் கார்களுக்கு என பிஎஸ் 6 மாசு விதிகளை நடைமுறைப்படுத்தும் போது பல்வேறு விதமான மாற்றங்களை சுற்றுச்சூழல் மாசை குறைக்க மேற்கொள்ளப்பட உள்ள நுட்பத்தால் பெட்ரோல் கார்கள் மற்றும் டீசல் கார்களுக்குமான இடையிலான விலை வித்தியாசம் சுமார் 2 லட்சம் முதல் 2.50 லட்சம் வரை விலை அதிகரிக்கும் என்பதனால் டீசல் கார் பிரியர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே சிறிய ரக தொடக்கநிலையில் சந்தையில் உள்ள கார்கள் விலை கடுமையாக உயரக்கூடும். எனவே முதல்முறையாக கார் வாங்க விரும்புபவர்களுக்கு இது அதிர்ச்சியாக அமையும்.
டீசல் கார்களுக்கு மாற்றாக டொயோட்டா மற்றும் சுசூகி கூட்டணியில் ஹைபிரிட் கார்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பதுடன், சிஎன்ஜி வாகனங்கள் விற்பனை மற்றும் உற்பத்தியை அதிகரிப்பதுடன், டீசல் கார் மீதான ஈர்ப்பை குறைக்க வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது நாடு முழுவதும் பிஎஸ் 4 மாசு விதிமுறை அமலுக்கு உள்ள நிலையில் , பிஎஸ் 5 விதிமுறை புறந்தள்ளி விட்டு பிஎஸ் 6 மாசு நடைமுறை ஏப்ரல் 1, 2020 முதல் செயற்படுத்தப்பட உள்ளது.