மாருதி சுசூகி நிறுவனத்தின் கிராண்ட் விட்டாரா நடுத்தர எஸ்யூவி மாடல் ஆனது 2 லட்சம் விற்பனை இலக்கை வெற்றிகரமாக கடந்த 23 மாதங்களில் கடந்துள்ளது. டொயோட்டா மற்றும் மாருதி சுசூகி கூட்டணியில் தயாரிக்கப்பட்ட மாடல் ஆனது டொயோட்டா ஹைரைடர் என்ற பெயரிலும், மாருதி நிறுவனம் கிராண்ட் விட்டாரா என்ற பெயரிலும் விற்பனை செய்து வருகின்றது.
குறிப்பாக இந்த நடுத்தர எஸ்யூவி மாடல் ஆனது ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், ஹோண்டா எலிவேட், டாடா ஹாரியர், எம்ஜி ஆஸ்டர் போன்ற பல்வேறு மாடல்களுக்கு மிக கடும் சவாலினை ஏற்படுத்தி வருகின்றது.
Maruti Grand Vitara
மாருதியின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனையின் மூத்த நிர்வாக அதிகாரி பார்த்தோ பானர்ஜி கூறுகையில், “எங்கள் வலுவான ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் நிலையான தேர்வுகளை மேற்கொள்ள வாடிக்கையாளர்களை ஊக்குவிப்பதன் மூலம் கிராண்ட் விட்டாரா எஸ்யூவி பிரிவில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சாதனையின் மூலம் குறைந்த மாசு உமிழ்வு இயக்கம் மற்றும் சிறந்த ஓட்டுநர் அனுபவத்திற்கான எங்களின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
கிராண்ட் விட்டாரா காரில் மைல்ட் ஹைப்ரிட் பவர்டிரெய்ன் ஆப்ஷனில் 1.5-லிட்டர், 4 சிலிண்டர் K15C பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 102 hp மற்றும் 137 டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.
அடுத்து ஹைப்ரிட் என்ஜின் 78 bhp பவர் 141 Nm டார்க் வழங்கும் மின்சார மோட்டாருடன் 91 bhp மற்றும் 122 Nm டார்க் கொண்o 1.5-லிட்டர், 4-சிலிண்டர் பெட்ரோல் என இரண்டும் இணைந்து செயல்பட்டு அதிகபட்சமாக 115.56 hp பவரை வழங்குகின்றது. இந்த மாடலில் இ-சிவிடி கியர்பாக்ஸ் உள்ளது.
மாருதி சுசூகி கிராண்ட் விட்டாரா விலை ரூ.10.93 லட்சம் முதல் ரூ.19.93 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை அமைந்துள்ளது.