மஹிந்திரா நிறுவனத்தின் தலைமையின் கீழ் செயல்படும் பிரசத்தி பெற்ற வடிவமொழி நிறுவனமான இத்தாலி பினின்ஃபரினா சார்பில் , பெர்ஃபாமென்ஸ் ரக எலெக்ட்ரிக் ஹைபர் கார்களை உற்பத்தி செய்யும் நோக்கில் ஆட்டோமொபைலி பினின்ஃபரினா (Automobili Pininfarina) என்ற பிராண்டினை உருவாக்கப்பட்டுள்ளது.
ஆட்டோமொபைலி பினின்ஃபரினா
ரோம் நகரில் நடைபெறும் ஃபார்முலா இ ரோம் இ-பிரிக்ஸ் அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமொபைலி பினின்ஃபரினா பிராண்டில் முதல் எலெக்ட்ரிக் ஹைப்பர் ஸ்போர்ட்ஸ் கார் 2020 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்திரா ஆட்டோமொபைல் பிரிவு நிறுவனத்தின் கீழ் 2015 ஆம் ஆண்டில் இத்தாலியின் பிரபலமான டிசைன் நிறுவனமாக விளங்கும் பல்வேறு உயர் ரக சொகுசு கார்களை வடிவமைத்த பினின்ஃபரினா பிராண்டினை கையகப்படுத்தியதை தொடர்ந்து , பல்வேறு வளர்ச்சி நடவடிக்கைகளை மஹிந்திரா முன்னெடுத்து வருகின்றது.
இந்த புதிய எலெக்ட்ரிக் பிராண்டில் வரவுள்ள கார்கள் உயர்ரக பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்துவதுடன், அதிகப்படியான சொகுசு வசதிகளை பெற்று சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பினை வழங்கும் வகையில் மாசு வெளிப்படுத்தாத காராக விளங்கும் என மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த மஹிந்திரா குறிப்பிட்டுள்ளார்.
கிராண்ட் லக்சூரி என்ற நோக்கத்தை பின்புலமாக கொண்டு வடிவமைக்கப்பட உள்ள முதல் ஹைப்பர் கார் 2020 ஆம் ஆண்டில் சந்தைக்கு வரக்கூடும். இந்த கார் தானியங்கி நுட்பத்தின் மூன்றாவது லெவலை பெற்றிருப்பதுடன் அதிகபட்சமாக 0-100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டுவதற்கு 2 நொடிகள், 0-300 கிலோ மீட்டர் வேகத்தை எட்ட 12 நொடிகள் மற்றும் இந்த காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 400 கிமீ எட்டுதிறனை கொண்டு சுமார் 500 கிலோ மீட்டர் சிங்கிள் சார்ஜில் பயணிக்கும் திறன் கொண்டதாக அமைந்திருக்கும் என கூறப்படுகின்றது.
பினின்ஃபாரினா பிராண்டில் வரவுள்ள முதல் ஹைப்பர் எலெக்ட்ரிக் கார் விலை 2 மில்லியன் யூரோ-க்கு (ரூ.16 கோடி) குறைவாக அமைந்திருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 100 கார்கள் மட்டுமே உருவாக்கப்பட்ட உள்ளது. இந்த பிராண்டின் தலைமை செயல் அதிகாரியாக மைக்கேல் பெர்ச்செக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 25 ஆண்டுகால ஆட்டோமொபைல் துறை அனுபவத்தினை கொண்டவராகும். இவர் ஆடி இந்தியா நிறுவனத்தின் முன்னாள் தலைமை இயக்குநராக மற்றும் ஃபோக்ஸ்வேகன் குழுமம், வால்வோ குழுமம் போன்றவற்றில் முக்கிய பொறுப்புகளை வகித்தவராகும்.
மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் மின்சார கார்களை மற்றும் எஸ்யூவி, இல்குரக வர்த்தக வாகனங்களை விற்பனை செய்து வருகின்ற நிலையில் சர்வதேச அளவில் மின்சாரத்தில் இயங்கும் உயர் ரக பெர்ஃபாமென்ஸ் பிராண்டில் பினின்ஃபாரினா வாயிலாக புதிய தடத்தை பதிக்க ரூ.674 கோடியை முதலீடு செய்துள்ளது.