லெக்சஸ் ஆடம்பர கார் தயாரிப்பாளரின் முதல் பேட்டரி எலெக்ட்ரிக் வாகனமாக UX 300e கார் 2019 குவாங்சோ சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சி அரங்கில் வெளியிடப்பட்டுள்ளது. விற்பனையில் கிடைக்கின்ற UX காரின் தோற்றத்தில் பெரிதாக மாற்றமில்லாமல் எலெக்ட்ரிக் வெர்ஷனாக மாறி வந்துள்ளது.
சீனாவில் விற்பனை செய்யப்படுகின்ற டொயோட்டா சி-ஹெச்ஆர் எலெக்ட்ரிக் மாடலின் பவர் ட்ரெயின் அம்சங்களை பகிர்ந்து கொண்டுள்ள யூஎக்ஸ் 300இ காரின் பவர் அதிகபட்சமாக 204hp மற்றும் 300Nm டார்க் வழங்குகின்றது. 54.3kWh பேட்டரி பேக் பொருத்தபட்டு அதிகபட்சமாக 402 கிமீ ரேஞ்சு வழங்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 50kW வேக சார்ஜரை கொண்டு சார்ஜ் ஏற்ற இயலும் என உறுதியாகியுள்ளது.
டொயோட்டாவின் GA-C பிளாட்ஃபாரத்தை பின்பற்றி கட்டப்பட்டுள்ள யூஎக்ஸ் 300 இ, சாலையில் மிக சிறப்பான செயல்திறனை வழங்குவதனை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அமைதியான மற்றும் மிக நேர்த்தியான ஓட்டுதல் பயண அனுபவத்தினை வழங்குவதே குறிக்கோள் என்று லெக்ஸஸ் குறிப்பிட்டுள்ளது. புதிய பவர ட்ரையினை மிக சிறப்பான வகையில் செயல்படுத்தவும், பிரேக்கிங் ரீ-ஜெனெரேட்டிவ் சிஸ்டத்தை கொண்டுள்ளது.
கனெக்ட்டிவிட்டி கார் தொழில்நுட்பத்துடன் யூஎக்ஸ் 300 இ கிடைக்கும். லெக்ஸஸ் லிங்க் ஆப்பினை பயன்படுத்தி ஸ்மார்ட்போனுடன் இணைப்பதன் மூலம், பேட்டரி சார்ஜ் மற்றும் ஓட்டுதல் வரம்பு, சார்ஜிங் கட்டுப்பாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
அடுத்த ஆண்டு முதல் சர்வதேச அளவில் லெக்சஸ் UX 300e விற்பனைக்கு பல்வேறு நாடுகளில் கிடைக்க உள்ளது.