நாட்டின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசுகியின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல் “இ விட்டாரா” என்ற பெயரிலே விற்பனைக்கு வருகின்ற 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வெளியாக உள்ள நிலையில் இந்திய சந்தைக்கான மாடல் அனேகமாக ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சமீபத்தில் ஐரோப்பா சந்தை மற்றும் பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ள இ விட்டாரா மாடல் இத்தாலியில் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து அதனுடைய பேட்டரி மற்றும் நுட்பங்கள் தொடர்பான விபரங்கள் வெளியாகி இருக்கின்றது. ஆனால் இந்நிறுவனம் ரேஞ்ச் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடவில்லை என்றாலும் ஏறக்குறைய 400 முதல் 550 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்சை வெளிப்படுத்தலாம் என கூறப்படுகின்றது.
குறிப்பாக 2023 ஆட்டோ எக்ஸ்போவில் eVX என்ற பெயரில் காட்சிப்படுத்தப்பட்ட மாடலே தற்பொழுது எலெக்ட்ரிக் விட்டாரா மாடலாக மாறியுள்ள நிலையில் 2025, ஜனவரி 17ல் துவங்க உள்ள பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் உற்பத்தி நிலை இந்திய மாடலின் நுட்பவிபரங்கள் அறிமுக தேதி அல்லது விலையும் அறிவிக்கப்படலாம்.
இந்திய சந்தைக்கான மாடலும் சர்வதேச அளவில் உள்ளதை போன்றே FWD வேரியண்ட் 49kwh பேட்டரி பெற்று 144 PS பவர் மற்றும் 189Nm டார்க் வெளிப்படுத்தும், 61Kwh பேட்டரி பெறும் FWD வேரியண்ட் 174 PS பவர் மற்றும் 189Nm டார்க் வெளிப்படுத்தும், AWD டிரைவ் பெற்ற 61 kWh பேட்டரி மாடல் 184 PS பவர் மற்றும் 300Nm டார்க் வெளிப்படுத்த டூயல் மோட்டாருடன் வரக்கூடும்.
ஆனால் “ALLGRIP-e” ஆல் வீல் டிரைவ் மாடல் இந்திய சந்தையில் உடனடியாக விற்பனைக்கு வருமா அல்லது மாருதி இதனை சற்று தாமதப்படுதமா என்பதனை ஜனவரியில் தெரியவரும்.
குறிப்பாக, இந்த மாடலுக்கு போட்டியாக இந்திய சந்தையில் தற்பொழுதுள்ள கர்வ்.இவி, எம்ஜி இசட்எஸ் இவி, மஹிந்திரா எக்ஸ்யூவி 400 ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில் மாருதியின் இவிட்டாரா விலை ரூ.18 லட்சத்தில் துவங்கலாம். மேலும் வரவுள்ள க்ரெட்டா இவி மாடலுக்கு போட்டியாக அமைய உள்ளது.