2020 ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற கியா கார்னிவல் எம்பிவி காரில் இடம்பெற உள்ள வசதிகள் மற்றும் என்ஜின் விபரம் உட்பட 7,8 மற்றும் 9 இருக்கை ஆப்ஷன்களில் கொண்டு வரவுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.
இந்திய சந்தையில் 7 இருக்கை, 8 இருக்கை மற்றும் 9 இருக்கை என மூன்று விதமான சீட் ஆப்ஷனில் விற்பனைக்கு கிடைக்க உள்ளதை கியா உறுதிப்படுத்தியுள்ளது.
என்ஜின் விபரம்
சக்திவாய்ந்த 200 ஹெச்பி பவரை வழங்குகின்ற பிஎஸ்6 2.2 லிட்டர், 4-சிலிண்டர், டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு 441 என்எம் டார்க் வழங்கும். இதில் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் (Sportsmatic) டிரான்ஸ்மிஷன் பெற்றதாக கிடைக்க உள்ளது. கியா கார்னிவல் காரின் மைலேஜ் லிட்டருக்கு 13.19 கிமீ ஆக சான்று வழங்கப்பட்டுள்ள நிலையில், ஓட்டுதலில் லிட்டருக்கு 7 கிமீ முதல் 9 கிமீ வரை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
மிகவும் சக்திவாய்ந்த டர்போ டீசல் என்ஜினின் தொடக்கநிலை பிக்கப் மற்றும் தொடர்ந்து பயணிப்பதற்கான பிக்கப் சிறப்பாக உள்ளது. அதே போல இந்த காரினை பொறுத்தவரை அதிகப்படியான நீண்ட தொலைவு பயணம், சிறப்பான சொகுசு வசதிகளையும் கொண்டுள்ளது.
டிரிம் விபரம்
இந்தியாவில் கியா கார்னிவல் எம்பிவி ரக மூன்று டிரிம்களாக பிரீமியம், பிரெஸ்டீஜ் மற்றும் லிமோசைன் என கிடைக்க உள்ளது.
பிரீமியம்
ஆரம்ப நிலை பிரீமியம் வேரியண்டில் 7 இருக்கைகள் மற்றும் 8 இருக்கைகள் என இரண்டு விதமாக கிடைக்கும். இதன் முக்கிய அம்சங்களில் குறிப்பிடதக்கவையாக, 18 அங்குல கிரிஸ்டல் கட் அலாய் வீல், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆதரவை பெற்ற தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 4 ஸ்பீக்கர்கள் மற்றும் 2 ட்வீட்டர்கள், ரிவர்ஸ் கேமரா, 3.5 இன்ச் எம்ஐடி, க்ரூஸ் கட்டுப்பாடு, புஷ் ஸ்டார்ட் / ஸ்டாப் பொத்தான், எலக்ட்ரிக் ORVM மற்றும் கீலெஸ் என்ட்ரி இணைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைப்பினை பொறுத்தவரை இரட்டை முன் ஏர்பேக்குகள், ஈபிடி கொண்ட ஏபிஎஸ், நான்கு டயர்களிலும் டிஸ்க் பிரேக்குகள், ஐஎஸ்ஃபிக்ஸ் குழந்தை இருக்கை, பின்புற பார்க்கிங் சென்சார்கள், ரிவர்ஸ் கேமரா மற்றும் தானியங்கி ஹெட்லைட்கள் ஆகியவை அடங்கும்.
பிரெஸ்டீஜ்
பிரெஸ்டீஜ் டிரிம் 7 இருக்கைகள் மற்றும் 9 இருக்கைகள் என இரு விதமாக விற்கப்படும். இந்த வேரியண்டில் எல்இடி பொசிஷன் விளக்குகள், எல்இடி மூடுபனி விளக்குகள், எலக்ட்ரிக் ஓ.ஆர்.வி.எம், எல்இடி டெயில் விளக்கு, ஸ்மார்ட் பவர் டெயில்கேட், டூயல் பேனல் எலக்ட்ரிக் சன்ரூஃப், 220 வோல்ட் லேப்டாப் சார்ஜர், பாப் அப் சின்க் இருக்கைகள் மற்றும் ஸ்லைடிங் இருக்கைகளுடன் தோற்றத்தில் க்ரோம் அசென்ட்ஸ் சேர்க்கப்பட்டிருக்கும்
பாதுகாப்பு அமைப்பில் பீரிமியம் மாடலை விட கூடுதலாக பக்கவாட்டு மற்றும் கர்டெயின் ஏர்பேக்குகள், முன்புற பார்க்கிங் சென்சார், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், கார்னரிங் பிரேக்கிங் சிஸ்டத்தையும் பெற்றுள்ளது.
லிமோசின்
லிமோசைன் டிரிம் 7 விஐபி பதிப்பில் பிரத்தியேகமான இருக்கை அமைப்பில் கிடைக்கும். இந்த மாடல் 18 அங்குல ஸ்பட்டரிங்(Sputtering) அலாய் வீல், நேவிகேஷன் அமைப்புடன் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் UVO கனெக்ட்டிவிட்டி வசதியுடன் (3 ஆண்டு இலவச சந்தா), 8 ஸ்பீக்கர் ஹர்மன் / கார்டன் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர் மற்றும் 10.1 அங்குல இரட்டை தொடுதிரை பின்புற இருக்கையில் அமருபவர்களுக்கான பொழுதுபோக்கு வசதி போன்றவை சேர்க்கப்பட்டுள்ளது.
இன்னோவா கிரிஸ்டா உட்பட உயர் ரக பீரிமியம் எம்பிவி மாடல்களான பென்ஸ் வி கிளாஸ், டொயோட்டா வெல்ஃபயர் போன்ற மாடல்களை எதிர் கொள்ள உள்ள கியா கார்னிவல் எம்பிவி விலை ரூ.30 லட்சம் முதல் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. வரும் ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.