முக்கிய குறிப்பு
- ஜூன் மாத இறுதி நாட்களில் மெர்சிடிஸ் EQC எஸ்யூவி இந்தியாவில் வெளியாக உள்ளது.
- முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட உள்ளது.
இந்தியாவில் பரவலாக மின்சார கார் விற்பனை எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மெர்சிடிஸ் பென்ஸ் EQC நாட்டின் முதல் ஆடம்பர வசதிகளை பெற்ற எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலாக வெளியிடப்பட உள்ளது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட ஜி.எல்.எஸ் மாடலை தொடர்ந்து ஜூன் மாத இறுதி நாட்களில் விற்பனைக்கு வெளியிடுவதனை பென்ஸ் இந்தியா உறுதி செய்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பே விற்பனைக்கு திட்டமிடப்பட்டிருந்த இ.க்யூ.சி கோவிட்-19 பரவல் ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
5 இருக்கை கொண்ட மாடலாக மெர்சிடிஸ்-பென்ஸ் இ.க்யூ.சி மின்சார காரில் இரட்டை மின்சார மோட்டார் (முன் வீல் மற்றும் பின்புற வீல் என இரண்டிலும் தலா ஒரு மோட்டார்) பொருத்தப்பட்டு ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனை பெற்று சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 400 கிமீ தொலைவு பயணிக்கும் வரம்புடன் வரவுள்ள உள்ள இக்யூசி காரில் 80kWh லித்தியம் ஐயன் பேட்டரி பொருத்தப்பட்டு 407hp பவர் மற்றும் 765Nm டார்க் வெளிப்படுத்துவதுடன், இந்த மாடலில் உள்ள ஸ்போர்ட்ஸ் மோட் மூலம் 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்க்கு 5.1 விநாடிகளும், உச்சபட்ச வேகம் மணிக்கு 180 கிமீ ஆக உள்ளது.
பென்ஸ் EQC மாடலை பொறுத்த வரை இங்கே முற்றிலும் வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த மாடலின் விலை ரூ.1.50 கோடியில் அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளது.