ரூ. 8 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி மாடலில் நவீன ஸ்மார்ட் டெக் வசதிகள் உட்பட பிரீமியம் கார்களுக்கு இணையான இன்டிரியர் மற்றும் தோற்றத்தை கொண்டதாக விளங்குகின்றது. இந்தியாவில் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் விற்பனை செய்து வரும் பிரசத்தி பெற்ற க்ரெட்டா மாடலுக்கு கீழாக நிலைநிறுத்தப்படுகின்ற இந்த எஸ்யூவி மாடலில் அற்புதமான ப்ளூ லிங்க் டெக்னாலாஜி வசதி வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக கார்லீனோ கான்செப்ட் என காட்சிப்படுத்தப்பட்டு பிறகு வெனியூ என பெயரிப்பட்டுள்ள இந்த மாடலில் மூன்று விதமான என்ஜின் பெற்றிருப்பதுடன் , முதல்முறையாக இந்த பிரிவில் டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ் பெற்றதாகவும் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. சமீபத்தில் இந்த காரின் டெக் விபரங்கள் மற்றும் படங்களை அதிகார்வப்பூர்வமாக ஹூண்டாய் வெளியிட்டுள்ளது.
வெனியூ எஸ்யூவி என்ஜின் ஆப்ஷன்
120 HP குதிரைத்திறன் மற்றும் 172 Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம். இந்த என்ஜினில் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ மற்றும் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.
அடுத்த பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் மாடல் 83 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 115 என்எம் முறுக்குவிசை வெளிப்படுத்தும்.
அடுத்த டீசல் என்ஜின் ஆப்ஷனில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் மாடல் 90 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 220 என்எம் முறுக்குவிசை வெளிப்படுத்தும்.
ப்ளூலிங்க் டெக்னாலாஜி
7 வகையான பிரிவுகளை பெற்ற கனெக்ட்டிவிட்டி நுட்பங்களை பெற்றுள்ள இந்த வெனியூ காரில் குறிப்பாக காரினை பாதுகாக்கும் அம்சம், அவசரகால பாதுகாப்பு உரிமையாளர்களுக்கு காரின் நிலையை உடனுக்குடன் அறியும் வசதி, வாகனத்தின் பாரமரிப்பு சார்ந்த மேலான்மை வசதி என முதன்முறையாக இந்திய சந்தையில் குறைந்த விலை கொண்ட மாடலில் இதுபோன்ற அம்சங்களை இணைத்துள்ளது. இந்த காரில் வோடபோன் இ சிம் கார்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.
டிசைன் மற்றும் இன்டிரியர்
சமீபத்தில் இந்நிறுவனம் வெனியூ காரின் தோற்ற வரைகலை மற்றும் இன்டிரியர் படங்களை வெளியிட்டது. அற்புதமான கிரில் அமைப்பின் மத்தியில் ஹூண்டாய் லோகோ , ரன்னிங் எல்இடி விளக்கிற்கு மத்தியில் அமைந்துள்ள புராஜெக்ட்ர ஹெட்லைட், ஸ்கிட் பிளேட் என பல்வேறு அம்சங்களை கொண்டு ஸ்டைலிஷாக காட்சியளிக்கின்றது. மிகவும் அகலமான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் சென்ட்ரல் கன்சோலில் மிதக்கும் தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. மூன்று ஸ்போக்குகளை கொண்ட லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயிரிங் வீல், ஆடியோ சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் போன்றவை உள்ளன.
போட்டியாளர்கள்
இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் சப் காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடல்களான புதிதாக அறிமுகமான மஹிந்திரா எக்ஸ்யூவி300, டாடா நெக்ஸான் எஸ்யூவி, பிரபலமான ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் மாருதியின் விட்டாரா பிரெஸ்ஸா போன்ற மாடல்களை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டதாக வெனியூ மாடல் விளங்க உள்ளது. மற்ற கார்களை போன்றே மிகவும் ஸ்டைலிஷாக அமைந்துள்ள இந்த காரின் மிக முக்கிய பலமே 33 அற்புதமான டெக் அம்ங்களாகும். போட்டி மாடல்களை குறைவான டெக் வசதிகளே பெற்றுள்ளன.
வருகை விபரம்
இந்தியா உட்பட சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு செல்ல உள்ள ஹூண்டாயின் வெனியூ காரானது, முதல்முறையாக கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி அமெரிக்காவின் நியூ யார்க் ஆட்டோ ஷோ கண்காட்சியில் உற்பத்தி நிலை மாடலாக அறிமுகம் செய்யபட்டது. அதனை தொடர்ந்து இந்தியாவில் முதற்கட்டமாக அரேபிய கடலின் நடுவில் வெளியிட்டது.
வரும் மே மாதம் 21 ஆம் தேதி இந்திய சந்தையில் ஹூண்டாயின் அட்டகாசமான வசதிகளை கொண்ட வெனியூ விற்பனைக்கு வெளியிடப்படக்கூடும்.
வெனியூ காரின் விலை எவ்வளவு ?
சப் காம்பேக்ட் ரக எஸ்யூவி பிரிவில் வெளியாக உள்ள இந்த காரானது போட்டியாளர்களை விட சற்று கூடுதலான அம்சங்களை பெற்றிருப்பதனால் விலை சற்று அதிகமாகவே இருக்கும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது. எக்ஸ்யூவி 300 மற்றும் ஈக்கோஸ்போர்ட் மாடல்களை போல ஹூண்டாய் வெனியூ எஸ்யுவியில் மூன்று விதமான என்ஜின் , ப்ளூலிங்க் டெக்னாலாஜி , எலக்ட்ரிக் சன் ரூஃப் உட்பட பல்வேறு முதல்முறை வசதிகளை கொண்டுள்ளதால் இதன் விலை ரூ. 8 லட்சம் முதல் ரூ.13 லட்சத்ததுக்குள் அமைந்திருக்கலாம் என கருதப்படுகின்றது.