2015 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் கிரெட்டா தற்பொழுது 10,00,000 இலக்கை வெற்றிகரமாக கடந்து நடுத்தர எஸ்யூவி சந்தையில் முதன்மையான மாடலாக விளங்கி வருகின்றது. இந்தியாவில் தயாரிக்கப்பட்டு 2,80,000 யூனிட்டுகள் ஏற்றுமதி சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட 8 ஆண்டுகளில் அமோகமான வரவேற்பினை பெற்றுள்ள கிரெட்டா விற்பனை எண்ணிக்கை மாதந்தோறும் 12,000 கூடுதலான யூனிட்டுகளை விற்பனை செய்தி வருகின்றது. ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் 1 கிரெட்டா என விற்கப்படுகிறது.
விற்பனை சாதனை குறித்து பேசிய ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் சிஓஓ திரு. தருண் கார்க் கூறுகையில், “ இந்திய வாடிக்கையாளர்களின் இதயங்களை ஹூண்டாய் கிரெட்டா வென்று, இந்தியாவை ‘Live the SUV’ என்ற பிராண்டாக மாற்றியுள்ளது. இந்திய சாலைகளில் 1 மில்லியனுக்கும் அதிகமான கிரெட்டா உடன், ‘CRETA’ பிராண்ட், மறுக்கமுடியாத எஸ்யூவி என்ற அதன் பாரம்பரியத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஹூண்டாய் CRETA ஆனது வாடிக்கையாளர்களின் அமோக வரவேற்பை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டு அறிவிக்கப்பட்டதிலிருந்து 60 000க்கு மேற்பட்ட முன்பதிவுகளைத் தாண்டியுள்ளது.
எங்கள் வாடிக்கையாளர்கள் காட்டிய அபரிதமான அன்பு மற்றும் நம்பிக்கைக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். புரட்சிகரமான நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக, நாங்கள் தொடர்ந்து முன்னோடியாக உள்ளோம்.
2015ல் வெளியிடப்பட்ட கிரெட்டா வாடிக்கையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் உடனடி வெற்றி பெற்றது. அதிக விருது பெற்ற மாடலாகவும் ஹூண்டாய் மோட்டார் இந்தியாவிற்கு சிறந்த விற்பனையாளராக உள்ளது. உள்நாட்டு சந்தையில் 10 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் மற்றும் ஏற்றுமதி சந்தையில் 2.80 இலட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையாகியுள்ள நிலையில், ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் ‘மேக் இன் இந்தியா’ மீதான உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது என குறிப்பிட்டுள்ளார்.
கிரெட்டா வரிசையில் கூடுதலாக டாப் வேரியண்ட் கிரெட்டா என்-லைன் வேரியண்ட் விற்பனைக்கு வெளியாக உள்ளது.