வரும் ஜனவரி 7 ஆம் தேதி துவங்க உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2024ல் ஃபோர்டு இந்தியாவில் மீண்டும் கார் உற்பத்தி செய்வதற்கான முக்கிய திட்டங்கள் மற்றும் எதிர்கால முதலீடு தொடர்பான அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது.
சென்னை மறைமலை நகரில் அமைந்துள்ள ஃபோர்டு ஆலை விற்பனை முடிவை சமீபத்தில் கைவிட்டிருந்த நிலையில், ஃபோர்டு எண்டோவர் எஸ்யூவி மாடலுக்கான வடிவத்தை காப்புரிமை கோரி விண்ணப்பித்திருப்பதுடன் கூடுதலாக பணியிட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
Ford India RE entry Plans
கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஃபோர்டு நிறுவனம் இந்தியாவிலிருந்து வெளியேறுவதாக அறிவித்த நிலையில் தனது ஆலை விற்பனையை துவக்கியது. முதற்கட்டமாக குஜராத் சனந்த் ஆலையை டாடா நிறுவனத்திடம் விற்பனை செய்திருந்த நிலையில் சென்னை தொழிற்சாலை விற்பனை திட்டத்தை கைவிட்டது.
இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்த எண்டோவர் எஸ்யூவி பல்வேறு நாடுகளில் எவரெஸட் என்ற பெயரில் விற்பனைக்கு கிடைக்கும் நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்த மாடலின் அடிப்படையிலான முன்மாதிரியை இந்தியாவில் காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளது. எனவே, மீண்டும் ஃபோர்டு எண்டோவர் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் எலக்ட்ரிக் வாகனங்களை தயரிப்பதற்கான முயற்சியிலும் ஃபோர்டு களமிறங்க வாய்ப்புள்ளதால் முக்கிய அறிவிப்புகள் ஜனவரி 7 ஆம் தேதி துவங்க உள்ள தமிழ்நாட்டின் உலக முதலீட்டாளர்கள் அரங்கில் எதிர்பார்க்கலாம்.