சிட்ரோன் C3, C3 ஏர்கிராஸ் மற்றும் eC3 கார்களில் அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களில் ஒன்றாக உள்ள SRS ஏர்பேக்குகளின் எண்ணிக்கையை 6 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. தற்பொழுது உள்ள மாடல்களில் இரண்டு ஏர்பேக்குகள் மட்டுமே இடம்பெற்றுள்ளது.
சமீபத்தில் வெளியான சிட்ரோன் சி3 ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டை தொடர்ந்து பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக சிட்ரோன் வெளியிட்டுள்ள தகவலின் படி நடப்பு ஆண்டின் மத்தியில் முன் ஏர்பேக்குகள், பக்கவாட்டு ஏர்பேக்குகள் மற்றும் கர்டெயின் ஏர்பேக்குகள் என மொத்தமாக 6 ஆக உயர்த்தப்படுவதுடன், ISOFIX இருக்கை நங்கூரம் மற்றும் பின்புற சீட்பெல்ட் நினைவூட்டல் ஆகியவற்றை கட்டாய அடிப்படை அம்சமாக அனைத்து வேரியண்டிலும் இணைக்கப்படும் என உறுதிப்படுத்தியுள்ளது.
ரூ.12.85 லட்சத்தில் வெளியிடப்பட்ட சி3 ஏர்கிராஸில் 6 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் பெற்ற 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 110 PS பவரை 5500rpm-லும் மற்றும் 205 Nm டார்க் 1750rpm-ல் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் பிளஸ் மற்றும் மேக்ஸ் என இருவிதமான வேரியண்ட் பிரிவில் 5 இருக்கை மற்றும் 5+2 இருக்கை என இருவிதமான சீட் ஆப்ஷனை பெற்றுள்ளது.
இந்திய சந்தையில் உள்ள ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்கள் 6 ஏர்பேக்குகளை கட்டாயமாக்கியுள்ள நிலையில், இந்த வரிசையில் சிட்ரோனும் இணைகின்றது.