உலகில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு பிராண்டுக்கும் லோகோக்கள் உள்ளதை நாம் கவனித்திருப்போம். அந்த ஒவ்வொரு லோகோக்களுக்கும் பின்னால் ஒரு கதையிருக்கும். அப்படி விலையுயர்ந்த உலக பிரபலமான கார் நிறுவனங்களின் லோகோவுக்கு பின் உள்ள கதையையும், அதனுடைய அர்த்தத்தையும் இப்போது பார்க்கலாம்.
ஆஸ்டன் மார்டின்
ஜேம்ஸ் பாண்ட் படங்களில் பாண்டால் அதிகம் பயன்படுத்தப்படும் கார்களில் ஒன்றான ஆஸ்டன் மார்ட்டின் பெயரில் உள்ள ஆஸ்டன், ஆஸ்டன் என்ற மலையைக் குறிக்கும். மார்ட்டின் என்பது இந்த நிறுவனத்தை தொடங்கியவர்களில் ஒருவரான லயோனல் மார்ட்டினின் பெயராகும். காரின் லோகோவில் வேகத்தைக் குறிக்கும் இறக்கை , 1927-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இது பெண்டிலே நிறுவனத்தின் `விங்கிட் பி’ லோகோவை மாதிரியாக கொண்டு வடிவமைக்கப்பட்டது.
பிஎம்டபுள்யூ
பவேரியன் மோட்டார் வொர்க்ஸ் என்பதின் சுருக்கமே பிஎம்டபுள்யூ. லோகோவில் உள்ள வெள்ளை மற்றும் நீல நிறங்கள் பவேரியாவின் கொடியை குறிக்கிறது. வெளியில் உள்ள கருப்பு வட்டம் பிஎம்டபுள்யூ வின் தாய் நிறுவனமான ராப்பின் லோகோவிலிருந்து வடிவமைக்கப்பட்டது.
பெண்டிலே
பெண்டிலே நிறுவனம் முதன்முதலில் விமான இன்ஜின்கள் தயாரித்துவந்ததால், பெண்டிலேவின் லோகோவில் சிறகுகள் வடிவமைக்கப்பட்டன.
புகாட்டி
புகாட்டியை சுற்றி உள்ள 60 புள்ளிகளுக்கு பின் 2 கதைகள் உள்ளன. இந்த புள்ளிகள் முதலில் முத்துக்களைக் குறிக்கின்றன. மேலும் புகாட்டி இன்ஜினில் கேஸ்கட்டுகளுக்கு பதிலாக வடிமைக்கப்பட்டுள்ள சேஃப்டி வயர்களையும் குறிக்கின்றன. புகாட்டி என்பது இந்த நிறுவனத்தை தொடங்கிய எட்டோர் புகாட்டியின் பெயராகும்.
ஃபெராரி
ஃபெராரியின் லோகோவின் பின்னால் உள்ள கதை மிகவும் சுவாரசியமானது. இந்த லோகோவில் மேலே உள்ள வண்ணங்கள் இத்தாலி நாட்டுக் கொடியின் வண்ணத்தைக் குறிக்கின்றன. நடுவில் உள்ள மஞ்சள் வண்ணம் ஃபெராரி நிறுவனத்தை தொடங்கிய என்ஸோ ஃபெராரியின் சொந்த நகரமான மொடெனா நகரத்தை குறிக்கிறது.
லோகோவில் முன்னங்கால்களைத் தூக்கியபடி உள்ள கருப்பு குதிரைக்கு பின்னால் ஒரு கதை உண்டு. முதல் உலகப்போரில் ஜெர்மனிக்கு எதிராக சண்டையிட்டவர் இத்தாலி நாட்டு போர் விமான பைலட் ஃபிரான்ஸெஸ்கோ பராக்கா. 34 விமானங்களை வீழ்த்திய இவர் தேசிய அளவில் கதாநாயகனாக கொண்டாடப்பட்டார். அவரது போர்விமானத்தின் முன்பகுதியில் இதே போன்ற கருப்பு குதிரையின் படத்தை அவர் வரைந்திருந்தார். பின்பு பராக்கா 1918-ம் ஆண்டு கொல்லப்பட்டார்.
பராக்காவின் தாயையும் தந்தையையும் ஃபெராரியின் நிறுவனர், என்சோ ஃபெராரி சந்தித்தார். அப்போது பராக்காவின் தாய் ஃபெராரியை, அவர் மகனின் விமானத்திலிருந்த குதிரையை அவர்களின் லோகோவில் பயன்படுத்தச் சொன்னார். அது அவர்களுக்கு அதிர்ஷ்டத்தை கொண்டுவரும் எனவும் அவர் சொன்னதையடுத்து என்ஸோ அதே குதிரையின் படத்தை தன் லோகோவிலும் வடிவமைத்தார்.
ஜாகுவார்
இரண்டாம் உலகப்போருக்கு முன்னால் வரை ஜாகுவார் கார்கள் எஸ் எஸ் என்ற பெயரிலேயே விற்பனைக்கு வந்தன. இது ஹிட்லரின் நாசிப் படைகளின் எஸ் எஸ் பெயரை தாங்கியிருந்ததால், இதன் பெயர் ஜாகுவார் என மாற்றப்பட்டது. மேலும் முன்னேறுவதையும், கம்பீரத்தையும் ஜாகுவார் விலங்கு குறிப்பதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டது.
ரோல்ஸ் ராய்ஸ்
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தொடக்கத்தில் விமான இன்ஜின்களையும், விலையுயர்ந்த கார்களையும் தயாரித்துக்கொண்டிருந்தது. இதனுடைய லோகோவை வடிவமைத்தவர் சிற்பி சார்லஸ் ராபின்சன். இந்த லோகோவில் உள்ள பெண் ராபின்சனின் காதலியான எலியோனர் தராண்டன்னை குறிக்கிறது.