மாருதி சுசுகி நிறுவனத்தின் இக்னிஸ் காரின் மேம்பட்ட மாடலின் படங்கள் முதன்முறையாக இணையத்தில் வெளியாகியுள்ளது. தற்போது சர்வதேச அளவில் கிடைக்க உள்ள இக்னிஸ் காரின் தோற்ற அமைப்பில் கிரில் உட்பட பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.
வெளிவந்துள்ள படங்களில், இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்-பிரஸ்ஸோவில் உள்ளதை போன்ற புதிய கிரில் வடிவமைப்பையும், புதிய முன் மற்றும் பின்புற பம்பர் வடிவமைப்பையும் கொண்டுள்ளது. பம்பர்கள் இருபக்கமும் ஸ்கஃப் பெற்றிருக்கின்றது. மற்றபடி ஸ்டைலிங் அம்சங்களை பொறுத்தவரை எத மாற்றமும் இல்லை.
என்ஜின் ஆப்ஷனை பொறுத்தவரை, புதுப்பிக்கப்பட்ட மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பிஎஸ் 6 உடன் வரவுள்ளது. இந்த என்ஜின் தற்போது ஸ்விஃப்ட் மற்றும் பலேனோவில் காணப்படுகிறது. ஸ்விஃப்ட்டில் இடம் பெற்றுள்ள, 1.2-லிட்டர், நான்கு சிலிண்டர் எஞ்சின் 83 ஹெச்பி மற்றும் 113 என்எம் டார்க் வெளிப்படுத்தும். ஆனால் பிஎஸ் 6 முறைக்கு மாற்றும்போது, பவரில் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. இதன் கியர்பாக்ஸ் விருப்பங்களை பொறுத்தவரை 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி தானியங்கி கியருடன் வழங்கப்படும்.
இந்தியாவில் பிஎஸ்6 என்ஜின் கொண்ட மாருதி சுசுகி இக்னிஸ் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வெளியாக உள்ளது.
source – instagram/suzukigarage