சமீபத்தில் நடைபெற்ற இந்தியா யமஹா டீலர்கள் கூட்டத்தில் R3, R7, R1M MT-03,MT-07 மற்றும் MT-09 என பல்வேறு பீரிமியம் மோட்டார்சைக்கிள்களை காட்சிப்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்த மாடல்களில் R3 மற்றும் நேக்டு ஸ்போர்ட்டிவ் வெர்ஷன் MT-03 என இரண்டும் அடுத்த சில மாதங்களுக்கு பிறகு எதிர்பார்க்கலாம்.
யமஹா R3
இந்திய சந்தையில் முன்பாக விற்பனையில் கிடைத்து வந்த ஆர்3 மாடல் நீக்கப்பட்டிருந்தது. குறிப்பாக ஃபேரிங் ஸ்டைலை பெற்ற யமஹா R3 பைக்கில் DOHC அமைப்புடன் பேரலல் ட்வீன் சிலிண்டர் லிக்யூடு கூல்டு என்ஜின் 321cc அதிகபட்சமாக 10,750 RPM-ல் 42 PS பவர் மற்றும் 9,000 Rpm-ல் 29.6 Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
டயமண்ட் பிரேம் சேஸ் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள ஃபேரிங் ரக மாடல் 130 மிமீ பயணிக்கும் வகையில் 37 மிமீ அப் சைடு டவுன் ஃபோர்க், 120 மிமீ பயணிக்கும் மோனோ ஷாக் மற்றும் முன் மற்றும் பின்புறத்தில் முறையே 298 மிமீ டிஸ்க் மற்றும் 220 மிமீ டிஸ்க் பிரேக் பெற்றுள்ளது.
இந்த மாடலுக்கு போட்டியாக இந்திய சந்தையில் கேடிஎம் RC390, கவாஸாகி நின்ஜா 400 ஆகியவற்றை எதிர்கொள்ளும்.
யமஹா MT-03
R3 பைக்கும் நேக்டு ஸ்டீரிட் ஃபைட்டர் மாடல் எம்டி-03 மாடலும் ஒரே 321cc என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்றது. இந்திய சந்தையில் தற்பொழுது எம்டி-15 விற்பனையில் உள்ள நிலையில் பவர்ஃபுல்லான எம்டி-03 வரும் பொழுது கூடுதலான பிரீமியம் பைக் விற்பனை எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
இந்திய சந்தையில் போட்டியாக கேடிஎம் 390 டியூக், கவாஸாகி நின்ஜா 300 ஆகியவற்றை எதிர்கொள்ளும்.
யமஹா R7 & MT-07
நடுத்தர மோட்டார்சைக்கிள் பிரிவு சந்தையில் கிடைக்கின்ற R7 மற்றும் MT-07 என இரண்டு மாடலிலும் 689சிசி பேரலல் ட்வின் சிலிண்டர் 8,750 RPM-ல் 73.4 PS பவர் வெளிப்படுத்துவதுடன், 6,500 RPM-ல் 67 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த என்ஜின் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் பெற்றுள்ளது.
ஆர்7 மோட்டார்சைக்கிள் ஃபேரிங் ரக மாடலாக மிக நேர்த்தியாக அமைந்துள்ளது. அடுத்தப்படியாக எம்டி-07 நேக்டூ ஸ்டீரிட் ஃபைட்டர் ஆகும்.
யமஹா MT-09
யமஹாவின் பிரீமியம் வரிசையில் உள்ள MT-09 பைக்கில் 3-சிலிண்டர் கொண்ட 890சிசி என்ஜின் 10,000 RPM-ல் 119 PS பவர், 7,000 RPM-ல் 93 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. அட்ஜெஸ்டபிள் 41mm USD ஃபோர்க், 14L பெட்ரோல் டேங்க் பெற்றுள்ள பைக் 189 கிலோ எடை கொண்டது.
எப்பொழுது யமஹா பிரீமியம் பைக்குகள் விற்பனைக்கு வரும் என்ற உறுதியான தகவல் இல்லை. ஆனால், யமஹாவின் பெரிய பைக்குகள் வரும் மாதங்களில் விற்பனைக்கு வரக்கூடும்.