1955 ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டில் தொடங்கப்பட்ட இரு சக்கர வாகன நிறுவனமான யமஹா மோட்டார் கம்பெனி தொடங்கப்பட்டு 63 ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில், இதனை யமஹா டே என்ற பெயரில் ஜூன் 1, மற்றும் ஜூன் 2ந் தேதியில் சர்வதேச அளவில் கொண்டாடியது.
முதன்முறையாக 125சிசி எஞ்சின் பெற்ற YA-1 என்ற மாடல் 1955 ஆம் ஆண்டு உற்பத்தி தொடங்கப்பட்ட நிலையில், இதனை கொண்டாடும் வகையில் யமஹா டே என்ற பெயரில் சர்வதேச அளவில் உள்ள அனைத்து யமஹா மோட்டார் கம்பெனி சார்பில் கொண்டாடப்பட்டுள்ளது. ஸ்போர்ட்டிவ் ரக பைக்குகளை உருவாக்குவதில் முன்னணி வகிக்கும் யமஹா இந்தியாவில் 1985 ஆம் ஆண்டு எஸ்கார்ட்ஸ் குழும நிறுவனத்துடன் இணைந்து களமிறங்கியது குறிப்பிடதக்கதாகும்.
ஆகஸ்ட் 2001 முதல் இந்தியாவில் யமஹா மோட்டார் நிறுவனம் தனது ஜப்பான் தலைமை நிறுவனத்தின் 100 சதவீத நேரடி முதலீட்டில் உருவாக்கப்பட்டு இந்திய யமஹா மோட்டார் ( India Yamaha Motor Private Limited – IYM) என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றது. தற்போது பைக் மற்றும் ஸ்கூட்டர் விற்பனையில் சிறந்து விளங்கும் இந்நிறுவனம் சென்னை, சர்ஜாபூர் மற்றும் ஃபாரிதபாத் என மூன்று இடங்களில் தொழிற்சாலையை பெற்று உள்நாடு மற்றும் ஏற்றுமதி சந்தையில் செயற்பட்டு வருகின்றது.
இந்நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற பல மாடல்களில் மிகவும் குறிப்பிடதக்க ஆர்எக்ஸ் 100, ஆர்எக்ஸ் 135, கரக்ஸ், ஆர்15, ஃபேஸர் போன்றவற்றுடன் ஸ்கூட்டர் சந்தையில் ரே, ஃபேசினோ போன்றவை இன்றைய தலைமுறையினர் விரும்பும் மாடல்களாக விளங்குகின்றது.