ரிவர் மொபிலிட்டி நிறுவனத்தின் இண்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் தற்பொழுது புதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு விற்பனைக்கு ரூபாய் 5000 வரை விலை அதிகரிக்கப்பட்டு ரூபாய் 1.43 லட்சத்தில் கிடைக்க துவங்கியுள்ளது.
புதிதாக இண்டி ஸ்கூட்டரில் கிரே மற்றும் வெள்ளை என இரண்டு நிறங்கள் சேர்க்கப்பட்டு கூடுதலாக ஃபைனல் டிரைவ் தற்போது செயின் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. முன்பு பெல்ட் டிரைவ் ஆனது கொடுக்கப்பட்டிருந்தது. கூடுதலாக ரிவர்ஸ் பொத்தானை பிரத்தியேகமாக வழங்கியுள்ளது.
IP67 மதிப்பிடப்பட்ட 4kwh லித்தியம் ஐயன் பேட்டரி பேக்கை கொண்டுள்ள இந்த மாடலின் உண்மையான ரேஞ்ச் 120 கிமீ வரை வழங்கும் என கூறப்படுகின்றது. Eco, Ride மற்றும் Rush மூன்று ரைடிங் முறைகளை பெற்ற இண்டி ஸ்கூட்டரில் நடுப்பகுதியில் பொருத்தப்பட்ட மோட்டார் 6.7Kw பவர் மற்றும் 26Nm டார்க் வெளிப்படுத்துகிறது.
3.9 விநாடிகளில் 0-40 கிமீ வேகத்தை எட்டும். அதிகபட்ச வேகம் மணிக்கு 90 கிமீ என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 800-watt சார்ஜரை கொண்டு சார்ஜிங் பெற 5 மணி நேரத்தில் பேட்டரியை 80 சதவீதம் சார்ஜ் செய்யலாம்.
கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக விற்பனையில் உள்ள இந்த ஸ்கூட்டர் ஆனது 3000 க்கும் கூடுதலான விற்பனை எண்ணிக்கை பதிவு செய்துள்ளது. பெங்களுரூ, ஹைத்திராபாத் அதே நேரத்தில் தமிழ்நாட்டில் தற்போது சென்னை, கோயம்புத்தூர் என இரு மாநகரங்களிலும் முன்பதிவு நடைபெற்று விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. கூடுதலாக வேலூர் மாவட்டத்திலும் டீலரை துவக்க ரிவர் நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது. இதுதவிர விசாகப்பட்டினம், ஹூப்ளி, கொச்சின், பெல்காம், மைசூர் மற்றும் உப்பல் என பல்வேறு இடங்களில் சுமார் 25 டீலர்களை மார்ச் 2025க்குள் துவங்க உள்ளது.
இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் யமஹா நிறுவனம் முதலீடு செய்துள்ளளது.