ரூ.58,750 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸ் மற்றும் நவீன தலைமுறையினர் விரும்பும் வசதிகளை பெற்றதாக என்டார்க் ஸ்கூட்டர் விளங்குகின்றது.
டிவிஎஸ் என்டார்க் 125
இந்த வருடத்தின் மிக சிறப்பான ஸ்கூட்டர் ரக மாடலாக வலம் வரவுள்ள என் டார்க் மிகுந்த செயல்திறனுடன் நவீன தலைமுறையினர் விரும்பும் வசதிகளான ஸ்மார்ட்எக்ஸ்னெட் (TVS SmartXonnect) அமைப்பினை பெற்றதாக வந்துள்ளது.
டிவிஎஸ் அறிமுகப்படுத்தியுள்ள புதிய டிவிஎஸ் SmartXonnect எனப்படும் நுட்பம், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் ஆகும். இந்த கிளஸ்ட்டரிலிருந்து ப்ளூடூத் வாயிலாக மொபைல் போனை இணைக்கும் வசதி உட்பட, நேவிகேஷன் , அதிகபட்ச வேகம், லேப் டைமர், மொபைல் போன் பேட்டரி இருப்பு, இறுதியாக பார்க்கிங் செய்த இடம், சர்வீஸ் ரிமைன்டர், ட்ரிப்மீட்டர் போன்ற 55 அம்சங்களை கொண்டதாக கிடைக்க உள்ளது.
டிவிஎஸ் மோட்டாரின் என்டார்க் ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள புத்தம் புதிய CVTi-REVV 124.79 cc ஒற்றை சிலிண்டர் 4 ஸ்டோர்க் 3 வால்வுகளை கொண்ட ஏர்-கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 9.3 bhp ஆற்றலை 7500 ஆர்பிஎம் சுழற்சியில் வழங்குவதுடன், அதிகபட்சமாக 7500 ஆர்பிஎம் சுழற்சியில் 10.5 Nm டார்க்கினை வழங்குகின்றது.
டிவிஎஸ் நிறுவனத்தின் முதல் சக்திவாய்ந்த ஸ்கூட்டராக விளங்கும் என்டார்க் ஸ்கூட்டர் அதிகபட்ச வேகம் மணிக்கு 95 கிமீ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதன்முறையாக என்ஜின் கில் சுவிட்ச் கொண்ட ஸ்கூடராக என்டார்க் விளங்குகின்றது.
இந்த ஸ்கூட்டரின் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனுடன் 100x80x12 ட்யூப்லெஸ் டயரில் 220 மிமீ டிஸ்க் பிரேக் பெற்றிருப்பதுடன் பின்புறத்தில் கேஸ் நிரப்பட்ட ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பருடன் 110x80x12 ட்யூப்லெஸ் டயரில் 130மிமீ டிரம் பிரேக் இடம்பெற்றுள்ளது.
என்டார்க் ஸ்கூட்டர் 5 லிட்டர் கொள்ளளவு கொண்டுள்ள நிலையில் மேட் ஃபினிஷ் பெற்ற மஞ்சள், சிவப்பு, வெள்ளை, மற்றும் பச்சை ஆகிய 5 நிறங்களில் கிடைக்க உள்ளது.
இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற ஹோண்டா கிரேஸியா, ஏப்ரிலியா SR 125 மற்றும் வரவுள்ள ஹீரோ 125சிசி ஸ்கூட்டர் ஆகிய மாடல்களுக்கு எதிராக டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் ரூ.58,750 விலையில் வெளியிடப்பட்டுள்ளது.
வருகின்ற ஆட்டோ எக்ஸ்போவில் என்டார்க் ஸ்கூட்டர் பொதுமக்கள் பார்வைக்கு டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளது.