அடுத்த ஆண்டின் மத்தியில் சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சாலை சோதனை ஓட்டத்தை துவங்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சுசுகியின் மூலம் உருவாகப்பட உள்ள மின்சார ஸ்கூட்டர் சிறப்பான செயல்திறன் கொண்டதாகவும், அதேநேரத்தில் இந்நிறுவனத்தின் நான்கு சக்கர மற்றும் இரண்டு சக்கர வாகனங்களுக்கு ஏற்ற வகையிலான பேட்டரியை தயாரிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஜப்பானைச் சேர்ந்த சுசுகி நிறுவனம், இந்தியாவில் டொயோட்டா நிறுவனத்துடன் இணைந்து மாருதி சுசுகி மற்றும் டொயோட்டா கார்களுக்கான பேட்டரி வாகனம் சார்ந்த தொழிற்நுட்பத்தை உருவாக்க உள்ள நிலையில் கூடுதலாக இரு சக்கர வாகனங்களுக்கும் இந்நிறுவனம் பேட்டரி உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.
சுசுகி மோட்டார் கார்ப்பரேஷன் இந்தியாவின் நிர்வாக அதிகாரியும் துணை நிர்வாக பொது மேலாளருமான சடோஷி உச்சிடா கூறுகையில், “நாங்கள் இந்தியாவுக்கான மின்சார ஸ்கூட்டரை உருவாக்கி வருகிறோம், அடுத்த ஆண்டு இந்தியாவில் அதை சாலை சோதனை தொடங்குவோம். நாங்கள் தொடர்ந்து மின்சார வாகன சந்தையைப் படித்து வருகிறோம். நாங்கள் ஒரு முன்மாதிரி ஒன்றை உருவாக்கியுள்ளோம். ஈ.வி. சந்தையில் முடிந்தவரை தகவல்களை சேகரிக்கிறோம். ” என குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் மாருதி சுசுகி நிறுவனம் தனது முதல் வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரை அடுத்த ஆண்டின் மத்தியில் வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டு சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சோதனை செய்ய திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டின் இறுதியில் தனது முதல் ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடலாம்.
இந்த மாடல் விற்பனையில் உள்ள ஏதெர் 450, வரவுள்ள பஜாஜ் சேட்டக் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உதவி – zigwheels